வெளுத்து வாங்கும் கனமழை!: நாகை, காரைக்கால் துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்..!!

நாகை: வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக நாகை துறைமுக அலுவலகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதுவும் சென்னையை பெரு மழை, வெள்ளம் புரட்டிப் போட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வங்கக்கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புதுச்சேரிக்கு இடையே கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்ததை அடுத்து நாகை துறைமுக அலுவலகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டது.

கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லவில்லை. நாகப்பட்டினம், காரைக்கால், மயிலாடுதுறை மாவட்டங்களில் மீனவர்கள் கரைகளில் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி வைத்துள்ளனர். இதேபோல் வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் பாம்பன் துறைமுகத்திலும், ராமேஸ்வரம் துறைமுகத்திலும் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

புதுச்சேரி துறைமுகத்தில் 3ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நாளை கடற்கரை கோவில் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை மூட செங்கல்பட்டு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தொடர் மழை மற்றும் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: