வடகிழக்கு பருவ மழை எதிரொலி முத்தமிழ் மன்றத்தில் 60 இருளர்கள் தங்க வைப்பு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் முத்தமிழ் மன்றத்தில் 60 இருளர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவ மழை எதிரொலியால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் 60க்கும் மேற்பட்ட இருளர்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதேபோல், கடலோர கிராமங்களில் வசிப்போர் உடனடியாக அரசின் நிவாரண முகாம்களுக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததையொட்டி சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

இதில், குறிப்பாக செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. மேலும், மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்கள் 90 சதவீதம் நிரம்பி உள்ளன. மேலும், செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ‘ரெட் அலர்ட்’ எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில், உலக புகழ் பெற்ற சுற்றுலா தலமான மாமல்லபுரத்தில் வசிக்கும் 60க்கும் மேற்பட்ட இருளர் இன மக்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வருவாய்த்துறை, பேரூராட்சி நிர்வாகம் கிழக்கு கடற்கரை சாலையையொட்டி உள்ள முத்தமிழ் மன்றத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், இது குறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் தாசில்தார் சிவசங்கரன் நேரில் வந்து முத்தமிழ் மன்றத்தில் மின்சார வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்டவைகளை ஆய்வு செய்து, அங்கு தங்கியுள்ள இருளர் இன மக்களுக்கு போர்வை, அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். அப்போது, மாமல்லபுரம் வருவாய் ஆய்வாளர் ஜேம்ஸ், பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், விஏஓக்கள் நரேஷ்குமார், பூபதி, துப்புரவு ஆய்வாளர் ரகுபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related Stories: