வேலூர் கலெக்டர் அலுவலக ஊழியர்களை அச்சுறுத்திய வெறிநாய் குட்டிகளுடன் பிடிப்பு-ஒட்டுமொத்த நாய்களையும் பிடிக்க கோரிக்கை

வேலூர் : வேலூர் கலெக்டர் அலுவலக ஊழியர்களை அச்சுறுத்திய வெறிநாய் அதன் குட்டிகளுடன் பிடித்து நகருக்கு வெளியே விடப்பட்டது.வேலூர் நகரின் மக்கள் தொகைக்கு ஈடாக பல்கி பெருகி தேசிய நெடுஞ்சாலைகள் தொடங்கி குறுகிய சந்துகள் வரை ஒவ்வொரு 100 மீட்டருக்கும் சராசரியாக 20 வரை தெருநாய்கள் சுற்றி வருகின்றன. இந்த நாய்களால் அன்றாடம் கடிப்பட்டும், அவற்றால் கீழே விழுந்து படுகாயமடைந்து மருத்துவமனைகளுக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் தற்போது அதிகரித்து வருகிறது.

நாய்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவற்றை பிடித்து இனப்பெருக்க தடுப்பு ஊசி போடப்பட்டு வந்தது. பின்னர் ஏதோ காரணத்தால் அந்த பணி நிறுத்தப்பட்டுவிட்டது. இதனால் தெருநாய்களின் அதிகரித்து வரும் அட்டகாசத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாமல், பொதுமக்கள் வேதனைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், வேலூர் கலெக்டர் அலுவலக பி பிளாக் கட்டிடத்தின் கீழ்தளத்தில் தெருநாய் ஒன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இதனால் கலெக்டர் அலுவலகம் வரும் பொதுமக்கள், ஊழியர்களை அந்த நாய் விரட்டி, விரட்டி அச்சுறுத்தை ஏற்படுத்தியதுடன், அனைத்து அலுவலகங்களுக்குள்ளேயும் நுழைந்து ஊழியர்களை படாதபாடுபடுத்தி வந்தது.

இதுதொடர்பாக கலெக்டர் அலுவலக ஊழியர்கள் முறையிட்டதன்பேரில், கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மாநகராட்சி அதிகாரிகளுக்கு கலெக்டர் அலுவலக ஊழியர்களை அச்சுறுத்தும் தெருநாயை பிடிக்க உத்தரவிட்டார். அதன்பேரில் 4 பேர் கொண்ட குழுவினர் நீண்டநேரம் போராடி அந்நாயை குட்டிகளுடன் பிடித்தனர்.

அதேநேரத்தில் கலெக்டர் அலுவலக வளாகம், கலெக்டர் அலுவலக வாகன நிறுத்துமிடங்கள், காலியிடங்கள், பூங்கா, கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள குடியிருப்புகள், எஸ்பி அலுவலக வளாகம் என அனைத்து இடங்களிலும் அலுவலர்களையும், மக்களையும் அச்சுறுத்தும் நாய்களையும் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று கலெக்டர் அலுவலக ஊழியர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: