தொமுச தலைவர் சுப்புராமன் மறைவுக்கு முதல்வர் இரங்கல்

சென்னை: திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பேரவையின் தலைவர் வே.சுப்புராமன் மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தியறிந்து வருந்தினேன். தொலைத் தொடர்புத் துறையில் பணியில் சேர்ந்து தொழிலாளர்களின் இன்னல்களைப் போக்கிட 35 ஆண்டுகள் தொழிற்சங்கப் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 22 ஆண்டுகளாக நேரடியாக தொ.மு.ச.பேரவையில் இணைந்து, தொலைத்தொடர்பு ஊழியர் முன்னேற்றச் சங்கத்தினைத் தொடங்கியதோடு, பல்வேறு மாநிலங்களில் சங்கத்தின் கிளைகளை உருவாக்கி தொ.மு.ச. பேரவை என்கிற மத்திய அமைப்பு தேசிய அளவில் அங்கீகாரம் பெறுவதற்கு உறுதுணையாக இருந்தவர். தொழிலாளர்களின் உரிமைகளைப் பெறவும் இன்னல்களைப் போக்குவதற்காகவும் ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்து அகில இந்திய அளவிலும் மாநில அளவிலும் பல்வேறு போராட்டங்களை முன்னின்று நடத்தி, அதற்காக கைது செய்யப்பட்டுச் சிறை சென்றவர். அவரது மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினர், தொ.மு.ச. பேரவைத் தோழர்கள், கட்சியினர் மற்றும் நண்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: