லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் உத்தரபிரதேச காவல்துறை விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் அதிருப்தி.!

டெல்லி: லகிம்பூர் வன்முறை சம்பவத்தில் உத்தரபிரதேச காவல்துறை விசாரணை குறித்து உச்சநீதிமன்றம் தனது அதிருப்தியை தெரிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் லகிம்பூரில் கடந்த 3 ஆம் தேதி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஷ் மிஸ்ராவின் கார் மோதியதில், 4 விவசாயிகள் பலியாயினர். இதனால் ஏற்பட்ட வன்முறையில் பாஜவினர் உட்பட 5 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தின் போது ஆசிஷ் மிஸ்ரா அந்த இடத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அவர் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப் பட்டது.

விவசாயிகள் மீது காா் மோதுவதை உறுதிபடுத்தும் வகையில், விடியோ பதிவு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா மகன் ஆசிஷ் மிஸ்ரா கைது செய்யப் பட்டார். இந்நிலையில், இந்த வழக்கில் சிபிஐ-யை உள்ளடக்கிய உயர்நிலை நீதி விசாரணைக்கு உத்தரவிடக் கோரி 2 வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் எழுதினர். இதையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்து வருகிறது.

கடந்த மாதம் 26 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, இந்த சம்பவத்தில் பத்திரிகையாளர் ரமன் காஷ்யப், பாஜக தொண்டர் ஷியாம் சுந்தர் உயிரிழந்தது குறித்த அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்றும் சாட்சிகளுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உ.பி.அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வி.என்.ரமணா, நீதிபதிகள் சூர்யகாந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்பு முன்பு இன்று வந்தது.

அப்போது வெவ்வேறு எப்.ஐ.ஆர்-களில் சாட்சிகள் இடம்பெற்றிருப்பது குறித்து அதிருப்தி தெரிவித்த உச்ச நீதிமன்றம், தாங்கள் எதிர்பார்த்த விசாரணை இதுவல்ல என்று கூறியது. வழக்கின் நிலை குறித்த அறிக்கையில் எதுவுமே இல்லை என்ற புகார் கூறிய உச்ச நீதிமன்றம், காவல்துறை விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு ஏன் கண்காணிக்கக் கூடாது? என்றும் கேள்வி எழுப்பியது. அதோடு, ஓய்வு பெற்ற நீதிபதிகள் ராகேஷ் குமார் ஜெயின் (பஞ்சாப்) அல்லது ரஞ்சித் சிங் (ஹரியானா) ஆகியோர் பெயர்களையும் பரிந்துரைத்தது. இந்த கேள்விகளுக்கு வெள்ளிக்கிழமை பதிலளிப்பதாக உ.பி.அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

Related Stories: