தமிழகத்திற்கு அனைத்து உதவிகளும் கிடைக்கும்.! மழைவெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

சென்னை: சென்னை மழைவெள்ள பாதிப்பு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் தொலைபேசியில் பேசியுள்ளதாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். தமிழகத்துக்கு தேவையான அனைத்து தேவைகளையும் ஒன்றிய அரசு வழங்கும் என பிரதமர் மோடி உறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் வடகிழக்குப் பருவ மழை அக்டோபர் 26 அன்று தொடங்கியது. அப்போது முதலே தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த 10 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. இந்நிலையில் நேற்று இரவு முதல் காலை வரை விடியவிடிய சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிகக் கனமழை கொட்டியது.

குறிப்பாக சென்னையில் ஒரே நாள் இரவில் சுமார் 25 செ.மீ. மழை பதிவானது. இதனால், சென்னை வெள்ளக்காடானது. காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும்  கனமழையால் இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து காலை முதல் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள், அதிகாரிகள் என அரசு நிர்வாகம் முழுவது மழை, வெள்ளப் பணிகளில் களமிறங்கியுள்ளது. ஸ்டாலின் பாதிப்பு அதிகமாக உள்ள பகுதிகளுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். இதற்கிடையே சென்னையில் தொடர்ந்து மழை விட்டுவிட்டு பெய்து வரும் நிலையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு மிகக் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நவம்பர் 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஆகிய மாவட்டங்களில் மிகக் கன மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால், இந்த நான்கு மாவட்டங்களிலும் அடுத்த இரண்டு நாட்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படுவதாக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். மற்ற மாவட்டங்களில் விடுமுறை அளிப்பதைப் பற்றி மாவட்ட நிர்வாகங்கள் முடிவு செய்யலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். சென்னையிலும் தமிழகத்தின் பிற பகுதிகளிலும் மழையால் ஏற்பட்ட பாதிப்புகள், சேதாரங்கள் குறித்தும் பிரதமர் மோடி கேட்டு தெரிந்துகொண்டார். இதனையடுத்து இதுதொடர்பாக ட்விட்டரிலும் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார். அதில், “தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலவரம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் பேசினேன். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் மத்திய அரசின் ஆதரவை உறுதிப்படுத்தினேன். அனைவரின் நலம் மற்றும் பாதுகாப்புக்காக நான் பிரார்த்திக்கிறேன்.” என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Related Stories: