பிப்ரவரிக்குள் ஐரோப்பாவில் மேலும் 5 லட்சம் பேர் கொரோனாவால் பலியாக வாய்ப்பு!: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா: ஐரோப்பாவில் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் கொரோனா பாதிப்பால் மேலும் 5 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக  உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகையே உலுக்கிய கொரோனா தொற்று குறித்த அச்சம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக சற்றே குறைந்து வருகிறது. இந்நிலையில் ஐரோப்பா மற்றும் மத்திய ஆசிய நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைய வாய்ப்புள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பின் ஐரோப்பிய பிராந்தியத்திற்கான இயக்குனர் ஹன்ஸ்லக், தற்போதைய நிலையே தொடர்ந்தால் வரும் பிப்ரவரி மாதத்திற்குள் மேலும் 5 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழக்க கூடும் என எச்சரித்துள்ளார்.

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் ஐரோப்பிய பிராந்தியம் என வகைப்படுத்தப்பட்டுள்ள 53 நாடுகளில் 43 நாடுகளில் மருத்துவமனை படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் அவர் எச்சரித்துள்ளார். கொரோனா கட்டுப்பாடுகள் அதிகளவில் தளர்த்தப்பட்டுள்ளதும், தடுப்பூசி செலுத்துவதில் காட்டப்படும் மெத்தனமும் தொற்று மீண்டும் தீவிரமடைய வழிவகுக்கும் என்றும் ஹன்ஸ் கூறியுள்ளார். தடுப்பூசி குறைவாக செலுத்தப்பட்டுள்ள நாடுகள், தீவிர பாதிப்புக்கு உள்ளாகும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Related Stories: