குறிஞ்சிப்பாடி அருகே தரைப்பாலம் உடைந்தது : விவசாயிகள் வேதனை

நெய்வேலி:  குறிஞ்சிப்பாடி அருகே செங்கால் ஓடையில் கட்டப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் மழைநீரில் அடித்துச் செல்லப்பட்டதால்  விவசாயிகள் தங்கள் வயலுக்குச் செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். குறிஞ்சிப்பாடி அருகே கல்குணம் கிராமத்தில் திருவெண்ணெய்நல்லூர் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையின் குறுக்கே செங்கால் ஓடை செல்கிறது. இந்த ஓடையில் கட்டப்பட்டிருந்த தற்காலிக தரைப்பாலம் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழையின் போது பெரும் பகுதி அடித்துச் செல்லப்பட்டது. அதன் பின்னர் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மீண்டும் தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இந்தப் பாலமும் தற்போது ஒரு வாரமாக பெய்த கனமழை, என்.எல்.சி.யில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் ஆகியவற்றின் காரணமாக மீண்டும் உடைந்துள்ளது.

 செங்கால் ஓடையை சுற்றி சுமார் 500 ஏக்கரில் விவசாயிகள் தொடர்ந்து நெல் சாகுபடி செய்து வருகின்றனர். விவசாயிகள் தங்களது வயலுக்கு செல்லவும், தேவையான இடுபொருட்களை இதன் வழியேதான் எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு ஆணடும் மழை பெய்யும் போது இந்த பாலம் அடித்து செல்வதும், பின்னர் தற்காலிகமாக சீர் செய்வதும் வழக்கமாகிவிட்டது. இதேபோல் பலமுறை நடந்துள்ளது. இங்கு உயர் மட்ட பாலம் கட்ட வேண்டும் என்பது இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாகவே உள்ளது.  ஊரக வளர்ச்சித்துறை மூலம் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க ரூ. 2 கோடியே 50 லட்சம் மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை. இதுகுறித்து பலமுறை விவசாயிகள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்நிலையில் மீண்டும் தற்போது தரைப்பாலம் உடைந்துள்ளதால் விவசாயிகள் தங்கள் வயலுக்கு செல்ல முடியாமல், இடு பொருட்களை எடுத்துச் செல்ல முடியாமலும் மிகுந்த அவதிப்பட்டு வருகின்றனர்.

Related Stories: