முல்லை பெரியாறு அணை விவகாரம் அதிமுக அறிவித்துள்ள ஆர்ப்பாட்டம் தேவையற்றது: மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: முல்லைப் பெரியாறு அணையின் வெள்ள நீர் வெளியேற்ற பிரச்னையில் அரசியல் ஆதாயம் தேடும் வகையில், ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அதிமுக அறிவித்துள்ளது. அதிமுகவின் இத்தகைய அணுகுமுறைக்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதோடு, வரும் 9ம் தேதி நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள ஆர்ப்பாட்டம் முற்றிலும் தேவையற்ற ஒன்று.

 கேரளத்தில் கடந்த மூன்று மாதங்களாக தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து, தொடர்ந்து வெள்ளச்சேதம் ஏற்பட்டுள்ளது நாடறிந்த உண்மையாகும். இந்நிலையில், கேரளத்தில் உள்ள அனைத்து நீர்தேக்கங்களிலும் நீரை தேக்கி வைப்பது தொடர்பாக தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய நீர்மட்டம் 139.5 அடியை எட்டிய நிலையில், அணையின் கொள்ளளவு, நீர்வரத்து, தொடரும் கனமழை ஆகிய அம்சங்களை கருத்தில் கொண்டே படிப்படியாக உபரிநீர் திறந்து விடப்படுகிறது.

ஒருவேளை உபரிநீரை திறந்து விடாமல் தேக்கி வைத்து, ஒரேயடியாக திறந்துவிட்டால், கடந்த அதிமுக ஆட்சியின் போது 2015ல் சென்னையில் பெருமழையின் போது எந்தவொரு முறையான அறிவிப்பையும் செய்யாமல் செம்பரம்பாக்கம் ஏரி திறந்து விடப்பட்டதால் சென்னை நகர மக்கள் பெரும் பாதிப்பிற்கு உள்ளானதை போன்ற பெரும் ஆபத்து உருவாகவும் வாய்ப்பு உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், அதிமுக முழுக்க முழுக்க அரசியல் ஆதாயம் தேடும் வகையிலும், இரண்டு மாநில மக்களிடையே மோதலை ஏற்படுத்தும் வகையிலும் முல்லைப் பெரியாறு விவகாரத்தை ஒரு அரசியல் பிரச்னையாக மாற்ற முயற்சிக்கிறது. எனவே, இரு மாநில அரசுகள், உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசின் கண்காணிப்புக்குழு ஆகியோரின் வழிகாட்டுதல் மற்றும் கூட்டு முடிவின்படியே இந்த பிரச்னையை அணுக வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: