இல்லம் தேடி தடுப்பூசி திட்டம் நவ.30க்குள் 100% இலக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்யூர்: மதுராந்தகம் அருகே இல்லம் தேடி கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டத்தினை மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது, வரும் 30ம் தேதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்த அரசு திட்டமிட்டு இருப்பதாக தெரிவித்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் வட்டம் சரவம்பாக்கம் பகுதியில் இல்லம் தேடி கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர் நல்லாமூர், கீழக்கரணை, காட்டுதேவாதூர், விளங்கனூர் ஆகிய கிராமங்களில் தடுப்பூசி போடும் பணிகளை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அவர் பேசுகையில்: வரும் 30ம் தேதிக்குள் அனைவருக்கும் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி 100 சதவீதம் இலக்கை அடையும். இப்பணியை முடிக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் முதல் முறையாக கிராமப்புறங்களில் உள்ள இல்லம் தேடி தடுப்பூசி செலுத்தும் முகாம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள மொத்த மக்கள் தொகை 7.64 கோடி. இதில், நேற்று (நேற்று முன்தினம்) வரை மொத்தம் 5 கோடியே 91 லட்சத்து 18 ஆயிரத்து 663 பேருக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டுள்ளது. டெங்கு வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் முன்னேற்பாடுகள் தமிழ்நாடு முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளன. தீபாவளியை பாதுகாப்பான முறையில் கொண்டாட வேண்டும். தீ தடுப்பு நடவடிக்கையாக அனைத்து சுகாதார மற்றும் மருத்துவமனைகளில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளது, என்றார்.

Related Stories: