தீபாவளி இறுதிக்கட்ட பர்சேஸ் மும்முரம் தமிழகம் முழுவதும் புத்தாடை வாங்க கடைகளில் அலைமோதிய பொதுமக்கள்

* மழையை பொருட்படுத்தாமல் குவிந்தனர்

* பட்டாசு, சுவீட்ஸ் விற்பனையும் சூடுபிடித்தது

சென்னை: தீபாவளிக்கு ஒருநாள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், புத்தாடை உள்ளிட்ட பொருட்கள் வாங்க தமிழகம் முழுவதும் பொதுமக்கள் நேற்று அதிக ஆர்வம் காட்டினர். மழையையும் ெபாருட்படுத்தாமல் அவர்கள் இறுதிக்கட்ட பர்சேஸில் ஈடுபட்டனர். பட்டாசு, சுவீட்ஸ் விற்பனையும் சூடுபிடித்தது.தீபாவளி பண்டிகை நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதற்கு, இன்னும் ஒரு நாள் மட்டுமே எஞ்சியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நேற்று மழை பெய்ததால் பல மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. மேலும் பல்வேறு தனியார் நிறுவனங்களில் நேற்று தீபாவளி போனஸ் வழங்கப்பட்டது.இதனால், தீபாவளி ஷாப்பிங் செய்ய தமிழகம் முழுவதும் கடைகளில் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

தமிழகத்தில் வழக்கமாக காலை 10 மணிக்கு தான் கடைகள் திறக்கப்படும். ஆனால், தீபாவளி விற்பனையை முன்னிட்டு நேற்று காலையில் வழக்கத்தை விட கடைகள் முன்பாக திறக்கப்பட்டது.நேற்று பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் குடை பிடித்தபடி பொருட்களை மக்கள் வாங்கிச் சென்றனர். மாலையில் தி.நகர் உஸ்மான் சாலை, பாண்டி பஜார், ரங்கநாதன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் எங்கு திரும்பினாலும் பண்டிகை கால கூட்டத்தை பார்க்க முடிந்தது. நகைக்கடைகளிலும் கூட்டம் சற்று அதிகமாக தான் இருந்தது.தீபாவளி பர்சேஸ் செய்ய வந்தவர்கள் இறுதியாக குடும்பத்துடன் அருகில் உள்ள ஓட்டல்கள், ஐஸ் கிரீம் பார்லர்கள், ஜூஸ் கடைகளில் அமர்ந்து சாப்பிட்டனர். இதனால், பஜார் வீதிகளில் உள்ள சிறியது முதல் பெரிய ஓட்டல்கள் வரை கூட்டம் வழக்கத்தை விட அதிகமாக இருந்தது.

சாலையோர கடைகளில் விதவிதமான அலங்கார பொருட்கள், பாசி மாலைகள், அணிகலன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தன. அங்கும் விற்பனை  மும்முரமாக நடந்தது. பொதுமக்கள் வசதிக்காக வழக்கமாக இயக்கப்படும் பஸ்களை காட்டிலும் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டன.

மின்சார ரயில்களிலும் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இன்று தீபாவளிக்கு முந்தைய நாள் என்பதால், இன்று மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதனால், சென்னை நகரில் உள்ள கடைகளை முன்கூட்டியே திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மளிகை கடைகள், சுவீட்ஸ் கடைகள் உள்ளிட்ட கடைகளிலும் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பட்டாசு விற்பனை

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் தீவுத்திடல், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம், பிராட்வே, கோயம்பேடு, நந்தம்பாக்கம், போரூர் மைதானம் உள்ளிட்ட இடங்களில் பட்டாசு கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ஏராளமானோர் குடும்பத்துடன் வந்து பட்டாசுகளை வாங்கி சென்றனர். தீவுத்திடல் உள்ளிட்ட பகுதிகளில் மாலையில் ஏராளமானோர் வந்து  ஆர்வமுடன் பட்டாசுகளை வாங்கி சென்ற காட்சியை காணமுடிந்தது.

Related Stories: