மராட்டியத்தில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!: துணை முதல்வர் அஜித் பவாரின் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்?

மும்பை: மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வருமான வரித்துறையினர் முடக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 2010ம் ஆண்டு சதாரா மாவட்டத்தில் உள்ள ஜரந்தேஸ்வர் சாகரி சர்க்கரை ஆலையை மாநில கூட்டுறவு வங்கி குறைந்த விலையில் ஏலத்தில் விட்டது. அப்போது கூட்டுறவு வங்கியின் இயக்குனர்கள் வாரியத்தில் முக்கிய உறுப்பினராக தற்போதையை துணை முதலமைச்சர் அஜித் பவார் இருந்தார்.

அந்த ஆலையை வாங்க பயன்படுத்தப்பட்ட நிதியில், பெரும்பாலான தொகை அஜித் பவாருக்கு சொந்தமான நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரிகள், சமீபத்தில் 65.75 கோடி ரூபாய் மதிப்பிலான ஜரந்தேஸ்வர் சர்க்கரை ஆலையை முடக்கினார்கள். இந்நிலையில் வரி ஏய்ப்பு புகார் அடிப்படையில் அஜித் பவாரின் சகோதரிகள் உள்ளிட்ட சில குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான தொழில் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் கடந்த மாதம் 7ம் தேதி சோதனை மேற்கொண்டனர்.

ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் சிலவற்றிலும் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்நிலையில் அஜித் பவாருக்கு சொந்தமான 1000 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் நாரிமன் பாயிண்ட்-இல் உள்ள நிர்மல் டவர் உள்ளிட்ட 5 சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. மராட்டிய துணை முதல்வரின் 1000 கோடி ரூபாய் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலால் அந்த மாநிலத்தில் பரபரப்பு நிலவுகிறது.

Related Stories: