வெள்ளி விழாவை கடந்த பெரம்பலூர் மாவட்டம்: 26 ஆண்டுகளை கடந்தும் தொழில் வளம் இல்லை: மக்கள் கவலை

பெரம்பலூர்: கரூர், பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்கள் திருச்சி மாவட்டத்துடன் ஒன்றாக இருந்தது. இந்நிலையில் 1995ம் ஆண்டு நவம்பர் 1ம் தேதி 10 ஒன்றியங்களுடன், 322 ஊராட்சிகளுடன் பெரம்பலூர் தனி மாவட்டமாக உதயமானது. தமிழகத்தின் மையத்தில் உள்ள மிகச்சிறிய மாவட்டம் பெரம்பலூர். பெரம்பலூர், குன்னம் என 2 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே உள்ளடக்கியது. தற்போது பெரம்பலூர், குன்னம், ஆலத்தூர், வேப்பந்தட்டை ஆகிய 4 தாலுகாக்கள் மட்டுமே உள்ளன.

121 ஊராட்சிகளையும், அதனுள் 152 வருவாய் கிராமங்களையும், 1752 சதுர கிமீ பரப்பளவையும், 5,64,511 மக்கள் தொகையையும், 75 சதவீதம் எழுத்தறிவையும் கொண்டது. மாவட்டம் உதயமான போது திமுக ஆட்சியில் எறையூர் நேரு சர்க்கரை ஆலையும், மீண்டும் திமுக ஆட்சியில் எம்ஆர்எப் டயர் தொழிற்சாலையும் கொண்டு வரப்பட்டுள்ளது. கனிம வளமான கருங்கற்களால் 100க்கும் மேற்பட்ட கல்குவாரிகளைக் கொண்டு வேறெந்தத் தொழிற்சாலைகளையும் உருவாக்காமல் உறங்கிக் கிடக்கிறது.

கல்விப்புரட்சி ஏற்படுமளவிற்கு 1 மருத்துவக் கல்லூரி, 1 வேளாண்மைக்கல்லூரி, 6 பொறியியல் கல்லூரிகள், 3அரசு கலைக்கல்லூரிகள் உள்பட 7 கலைக்கல்லூரிகள், 6 தொழில் நுட்பக் கல்லூரிகள், 3 தொழிற்பயிற்சி நிறுவனங்கள், 4ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், 4 நர்சிங் கல்லூரிகள், 3பிஎட் கல்லூரிகள், 1 கேந்திர வித்யாலயா  உள்ளது. சுற்றுலா பயணிகளைக்கவர வால்கொண்டா போர் நடந்த ரஞ்சன்குடி கோட்டை, சிலப்பதிகாரத் தொடர்பு கொண்ட சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளியம்மன் கோயில், புவி சார்குறியீடு பெற்றுப் புகழ்பெற்ற அரும்பாவூர் மரச் சிற்பங்களையும் கொண்டிருப்பது பெரம்பலூர் மாவட்டத்தின் சிறப்பு.

26 ஆண்டுகளை கடந்தும் தொழில் வளத்தை பெருக்க பருத்தி, மக்காச்சோளம் சம்மந்தப்பட்ட தொழிற்சாலையை கொண்டுவர முடியவில்லை. முயன்றால் 3 தலைமுறை இளைஞர்கள் பயன் பெறவாய்ப்புள்ளது. ஆனால் சின்னவெங்காயத்திற்கு தொடங்கிய தொழிற்கூடமே மூடிக்கிடக்கிறது. அறிவிக்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்ட அரசு மருத்துவக்கல்லூரி, ஜவுளிப்பூங்கா நடைமுறைக்கு வந்தால் கூட நாளைய தலைமுறை நம்பிக்கையுடன் முன்னேறும்.

Related Stories: