மாதவரம் கைலாசநாதர் கோயிலில் இன்று ஆய்வு; ரூ15 கோடியில் 25 கோயில் குளங்கள் புனரமைப்பு: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

திருவொற்றியூர்: சென்னை மாதவரம் கைலாசநாதர் கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றை இந்து சமய அறநிலைய துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று காலை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: நூற்றாண்டுகளை கடந்திருக்கக்கூடிய கற்கோயில்களை புனரமைக்கவும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆகம விதிப்படி திருப்பணிகள், கும்பாபிஷேகம் நடைபெறாத கோயில்களை கடந்த 5 மாதங்களாக ஆய்வு செய்தேன். அந்த கோயில்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், ஊழியர்கள், பக்தர்களுக்கு தேவையான கழிவறை, குடிநீர் வசதி போன்றவற்றை ஏற்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்பேரில் மாதவரம் கைலாசநாதர் கோயில், கரிவரதராஜ பெருமாள் கோயில் ஆகியவற்றில் அடிப்படை தேவைகளை ஆய்வு செய்தோம். கோயில் சார்ந்த இடங்களை தனியார் பயன்படுத்துதல், கோயிலில் இருந்து வரக்கூடிய வருமானங்களை அக்கோயிலின் அனைத்து பணிகளுக்கு பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளோம். மேலும், ரூ2 கோடி மதிப்பீட்டில் மாதவரம் கைலாசநாதர் கோயில் குளத்தை புனரமைக்கும் பணிக்கு திட்ட மதிப்பீடு பெற்றிருக்கிறோம். அதன் வரைபடத்தை பார்வையிட்டு, சில மாற்றங்களை ஏற்படுத்த முடிவு செய்துள்ளோம்.

இங்கு மண் ஆய்வு பணி முடிந்து விட்டது. விரைவில் கோயில் கட்டுமான பணிகள் துவங்கும். தமிழக கோயில்களை முழுவதும் புனரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தாண்டில் ₹15 கோடியில் 25 திருக்குளங்களை புனரமைக்கும் பணியை மேற்கொள்கிறோம். கோயில்களை முழுமையாக சீரமைக்கவும், நந்தவனங்கள், தேர்கள் பராமரிப்புக்கு என இந்தாண்டு ₹100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் சீரமைப்பு மற்றும் புனரமைப்பு பணிகள் துவங்கும். ஓராண்டுக்குள் அனைத்து கோயில்களிலும் பாதுகாப்பு (ஸ்ட்ராங் ரூம்) அறை அமைக்கப்பட்டு விட்டால், சிலைகள் கடத்தப்படுவது தடுக்கப்படும்.

முதல்வரின் நேரடி கண்காணிப்பில் இப்பணிகள் நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். ஆய்வில் மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ, அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், இணை ஆணையர் பிரியா, உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, திமுக நிர்வாகிகள் ராமகிருஷ்ணன், புழல் நாராயணன், தி.மு.தனியரசு, நாஞ்சில் ஞானசேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: