சென்னை உயர் நீதிமன்ற புதிய நீதிபதியாக சத்யநாராயண பிரசாத் பதவியேற்பு: தலைமை நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்

சென்னை:  சென்னை உயர் நீதிமன்றத்தின் மொத்த நீதிபதிகளின் ஒதுக்கீடு 75. தற்போது 59 நீதிபதிகள் உள்ளனர். இந்த நிலையில் புதிதாக சத்யநாராயண பிரசாத்தை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்ந்துள்ளது. இதை தொடர்ந்து புதிய நீதிபதி சத்யநாராயண பிரசாத் நேற்று பதவியேற்றார். அவருக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.  புதிய நீதிபதியை வரவேற்று அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், தமிழ்நாடு பார்கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், வக்கீல்கள் சங்க தலைவர் ஜி.மோகனகிருஷ்ணன், பெண் வக்கீல்கள் சங்க தலைவி லூயிசாள் ரமேஷ், முன்னாள் தலைவி வி.நளினி மற்றும் மெட்ராஸ் பார் அசோசியேஷன், லா அசோசியேஷன் நிர்வாகிகள் பேசினர்.

பின்னர் ஏற்புரையாற்றிய நீதிபதி சத்யநாராயண பிரசாத், 11 வயதில் தந்தையை இழந்த தான், இந்த நிலைக்கு உயர்வதற்கு தனது தாயே முழுமையான காரணம் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். மாவட்ட நீதிபதியாக இருந்த தனது தந்தை 45 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த வாய்ப்பு தற்போது தனக்கு கிடைத்துள்ளது. வழக்கறிஞராக பதிவு செய்த 2 மாதங்களிலேயே நீதிமன்றத்தில் வாதிடுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. உண்மையாகவும், நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் தனது பணியை மேற்கொள்வேன் என்றார்.  நீதிபதி ஜெ.சத்ய நாராயண பிரசாத் 1969ல் தஞ்சாவூரில் பிறந்தார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில் 1997 ஜனவரி 29ல் வழக்கறிஞராக பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: