ராமநாதபுரம் அருகே பறவைகள் வேட்டை துப்பாக்கி பறிமுதல்-மூன்று பேர் சிக்கினர்

ராமநாதபுரம் :  ராமநாதபுரம் அருகே வனப்பகுதிகளில் பறவைகளை சிலர் வேட்டையாடுவதாக வன சரகர் வெங்கடேஷுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி வனவர் ராஜசேகர், வனக்காப்பாளர்கள் முத்துக்குமார், கார்த்திக் ராஜா செல்வராகவன் ரோந்து மேற்கொண்டனர். அப்போது அங்கு 3 பேர் கையில் பையுடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், சித்தார் கோட்டையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த முஹமது இஸ்மாயில்(40), அப்துல் சத்தார்(35), புஹாரி அஸ்மத் அலி(31) ஆகியோர் எனவும், பறவையினங்களை இறைச்சிக்காக வேட்டையாடியது தெரிந்தது.  

அவர்களிடமிருந்து, மாங்குயில் 2, சின்னான் 1, குயில் 6, கரும் சிவப்பு வால் ஈ பிடிப்பான் 4, புள்ளி புறா 3, அரசவால் ஈ பிடிப்பான் 2, செம்மார்பு குக்குருவன் 1, தோட்ட கள்ளன் 2, நீல கொண்டை ஈ பிடிப்பான் 1, நீல முக செண்பகம் 1 என 23 பறவைகளை இறந்த நிலையில் பறிமுதல் செய்தனர். மேலும் வேட்டையாட பயன்படுத்திய 4 அடி உயர துப்பாக்கியையும் (ஏர் கன்) பறிமுதல், 10 கிராம் எடை கொண்ட 26 குண்டுகளை பறிமுதல் செய்தனர். இதனால்  3 பேருக்கும் ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

Related Stories: