கேரள மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் மீண்டும் நிலச்சரிவு: பல மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை..!!

திருவனந்தபுரம்: கேரளாவில் வரும் 31ம் தேதி வரை கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, இடுக்கி, கோட்டயம் மற்றும் ஆலப்புழா ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்யும் என்பதால் இந்த மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் கடந்த வாரம் பெய்த பலத்த மழை காரணமாக மலையோர கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி சுமார் 50க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். மண்ணில் புதைந்தவர்களை தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் ராணுவத்தினர் மீட்டனர். வெள்ளத்தில் சிக்கியவர்களும் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். இந்த நிலையில் கோட்டயம் மாவட்டம் எருமேலி பகுதியில் நேற்று கன மழை பெய்தது. இதில் அஞ்சால் வேலி பகுதியில் பலத்த நிலச்சரிவு ஏற்பட்டது.

இதுபோல பள்ளிபாடி, வாழையத்துபட்டி பகுதிகளிலும் அடுத்தடுத்து நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் இருந்த 10-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதம் அடைந்தது. அதிர்ஷ்டவசமாக வீடுகளில் இருந்தவர்கள் நிவாரண முகாம்களுக்கு சென்றுவிட்டதால் உயிர்பலி ஏற்படவில்லை.

இதற்கிடையே இடுக்கி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் அணைக்கு வரும் உபரி நீரை திறந்து விட பொதுப்பணி துறை அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதுதொடர்பாக இடுக்கி அணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கடந்த வாரமும் இடுக்கி அணையில் இருந்து வெள்ளம் திறந்து விடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: