நடுரோட்டில் பஸ்சை வழிமறித்து ஓட்டுனர், நடத்துனர் மீது தாக்குதல்: 10 பேர் கும்பலுக்கு வலை

ஆவடி: பூந்தமல்லியிலிருந்து செங்குன்றம் நோக்கி தடம் எண்.62 என்ற மாநகரப் பஸ் நேற்று முன்தினம் இரவு வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்து மாதவரம் பணிமனைக்கு சொந்தமானது. இந்த பேருந்தை அம்பத்தூரை அடுத்த பாடி, தேவர் நகரைச் சார்ந்த ஆதித்ய கரிகாலன் (35) என்ற ஓட்டுனர் ஓட்டி வந்தார். நடத்துனராக மாதவரம், வடபெரும்பாக்கம் சார்ந்த குபேரன் (43) என்பவர் பணியாற்றினார். பேருந்து இரவு 9.45மணி அளவில் ஆவடி பஸ் நிலையத்தில் பயணிகளை இறக்கி கொண்டிருந்தது. அப்போது இந்த பஸ்சில் திருமுல்லைவாயல் மணிகண்டபுரத்தை சார்ந்த பரத் (24) என்ற வாலிபர் ஏறி பின்னர், அவர் படிக்கட்டில் நின்றபடி பயணம் செய்துள்ளார். இதனையடுத்து, அவரை நடத்துனர் குபேரன் காலியாக உள்ள இருக்கையில் உட்காரும்படி கூறியுள்ளார்.

ஆனால், அவர் உட்கார மறுத்து தொடர்ந்து படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார். இதனையடுத்து பரத்தை, நடத்துனர் குபேரன் பேருந்தில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பரத் செல்போன் மூலமாக மணிகண்டபுரத்தில் உள்ள நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார். மேலும், அவரும் அந்த பஸ்சை பின் தொடர்ந்து வேறு ஒரு வாகனம் மூலமாக மணிகண்டபுரத்திற்கு வந்துள்ளார். பின்னர், அங்கு அவரும் அவரது நண்பர்களும் சேர்ந்து பஸ்சை வழிமறித்து நிறுத்தியுள்ளனர். இதன் பிறகு, அவர்கள் பூட்டியிருந்த படிக்கட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே பஸ்க்குள் சென்றுள்ளனர். பின்னர், நடத்துனர் குபேரன் மற்றும் ஓட்டுனர் ஆதித்ய கரிகாலன் ஆகியோரை உள்பட 10க்கும் மேற்பட்ட நபர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனை பார்த்த பொதுமக்கள் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு ரோந்து போலீசார் விரைந்து வந்தனர். அதற்குள் பரத் உள்பட நண்பர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர். தாக்குதலில் நடத்துனர், ஓட்டுனர் இருவரும் காயமடைந்தனர். இருவரையும் பொதுமக்கள் மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், அங்கிருந்து அவர்கள் இருவரும் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை முடிந்து இருவரும் நேற்று காலை திருமுல்லைவாயல் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

Related Stories: