திருவாரூர் அருகே கோயில் குளத்தில் குதித்து சென்னையை சேர்ந்த சினிமா உதவி இயக்குனர் தற்கொலை

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, பாரதிதாசன் நகரை சேர்ந்தவர் தங்க ரத்தினம் (51). உள்ளிக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண்காணிப்பாளர். இவரது கணவர் குணசேகரன் இறந்து விட்டார். இவரது மகன் சத்யன் (31), திருமணமாகாதவர். டான்ஸ் மாஸ்டரான இவர், சென்னையில் தங்கியிருந்து திரைப்பட உதவி இயக்குனராக பணியாற்றி வந்தார். விஜய் சேதுபதி நடித்த சூது கவ்வும் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்றியுள்ளார். பல குறும்படங்களும் எடுத்துள்ளார். இந்நிலையில், தங்க ரத்தினம் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 2 ஆண்டுகளாக சத்யன் மன்னார்குடியில் தங்கி தாயை கவனித்து வந்தார்.

நேற்றுமுன்தினம் இரவு 7 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே சென்ற சத்யன், இரவு 9மணியாகியும் வீடு திரும்ப வில்லை. அவரது தாய், சத்யனின் செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிச் ஆப் என வந்துள்ளது. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்க வில்லை. இந்நிலையில் நேற்று காலை ராஜகோபால சுவாமி கோயில் தெப்பக்குளத்தில் சத்யன் சடலமாக மிதப்பது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணை நடத்திய மன்னார்குடி டவுன் போலீசார் கூறுகையில், பல திரைப்படங்களுக்கு உதவி இயக்குனராக பணியாற்ற வாய்ப்புகள் வந்தும், தாயை கவனிக்க வேண்டியது இருந்ததால் சத்யனால் சென்னைக்கு செல்ல முடியவில்லை. இதனால் மன அழுத்தத்தில் தற்கொலை செய்துள்ளார் என்றனர்.

Related Stories:

More
>