பேச்சிப்பாறை அருகே யானைகள் அட்டகாசம்: கோதையாற்றை கடந்து வந்ததால் விவசாயிகள் அச்சம்

குலசேகரம்: குமரி மாவட்டத்தில் சமீப காலமாக காட்டுயானைகள் விளை நிலங்களில் புகுந்து நாசம் செய்வது அதிகரித்து வருகிறது. சில மாதங்களுக்கு முன் பேச்சிப்பாறை அருகே ஒட்டனூர் பகுதியில் வாழை தோட்டங்களை  யானைகள் அழித்து வந்ததால் ,பாதுகாப்பிற்காக விவசாயிகள் வாழைகளை வெட்டி அழித்தனர். இருந்தும் அந்தப்பகுதியில் தொடலிக்காடு வனப்பகுதியிலிருந்து யானைகள் இரவு நேரத்தில் தொடர்ந்து வந்து அட்டகாசம் செய்து வருகிறது. கோதையாறு, மைலார் போன்ற இடங்களில் ரப்பர் தோட்டங்களில் பகல் நேரங்களில் யானைகள் அவ்வப்போது உலா வருகிறது. தற்போது யானைகள் நீண்ட தூரம் பயணித்து  பேச்சிப்பாறை தனியார் எஸ்டேட்கள் மற்றும் கோதையாற்றை கடந்து வெட்டிமுறிச்சான், தொழிகடவு  பகுதியில் உள்ள விளைநிலங்கள் , தென்னங்கன்றுகளை நாசம் செய்துள்ளது. நீண்ட தூரம் பயணித்து, கோதையாற்றையும் யானைகள் கடந்து வந்திருப்பது பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சமடைய செய்துள்ளது.

சாதரணமாக குமரியின் அடர்ந்த காட்டுபகுதிகளில் யானைகள் நடமாட்டம் அதிகம் உண்டு. சபரிமலை சீசன் நேரத்தில் கேரளா வனப்பகுதியிலிருந்து யானைகள் தமிழக வனப்பகுதிகளுக்கு இடம்பெயரும். அவை குறிப்பிட்ட நாட்களில் மீண்டும் தங்கள் பகுதிகளுக்கு சென்றுவிடும். வறட்சி அதிகமான காலங்களில் தண்ணீர் குடிப்பதற்கும் உணவுக்கும் நீர்நிலை சார்ந்த பகுதிகளை நாடிவரும். தற்போது இந்தநிலைமாறி  அடிக்கடி விளைநிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சுற்றி வருகிறது. அரசு மற்றும் தனியார் ரப்பர் தோட்டங்களில் புதிதாக நடவுசெய்யப்பட்ட ரப்பர் செடிகளுக்கிடையே ஊடுபயிராக அன்னாசி பயிரிடப்படுகிறது. அன்னாசி பழசுவை, மணம் போன்றவை இவைகளுக்கு பிடித்துப் போனதால் யானை கூட்டம் அதிக அளவு இந்த பகுதிகளை நோக்கி படையெடுத்து வருகிறது. இதனால் விவசாயிகள், தொழிலாளர்கள் செய்வதறியாது திகைத்துபோய் உள்ளனர். வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதற்கு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியே வருவதை தடுக்க வேண்டுமென்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: