சிறையில் இருந்து பீகார் திரும்பியதும் புது உத்வேகம் சிங்கம் களமிறங்கிடுச்ச்ச்சு...! 6 ஆண்டுக்கு பிறகு பிரசாரத்தில் குதித்த லாலு

பாட்னா: மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறை தண்டனை, மருத்துவனையில் சிகிச்சை என 3 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மாநிலம் பீகாருக்கு திரும்பியிருக்கும் லாலு பிரசாத் யாதவ், 6 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக மேடை ஏறி அனல் பறக்கும் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். லாலுவின் வரவுக்குப் பிறகு ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இடையே முறிந்து போன கூட்டணிக்கு மீண்டும் உயிர் கிடைத்துள்ளது. இந்திய அரசியலில் தவிர்க்க முடியாத தலைவர்களில் ஒருவர், பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ். கடந்த 2014ல் நாடு முழுவதும் மோடி அலை வீசிய போது, 2015 பீகார் சட்டப்பேரவை தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் மெகா கூட்டணி அமைத்து, மோடி அலையையும் மீறி பாஜ.வை மண்ணை கவ்வ வைத்தவர்.

பீகாரில் சுமார் 30 ஆண்டுக்கும் மேலாக காங்கிரசுடன் கூட்டணி வைத்திருப்பவர். காங்கிரஸ் தலைவர் சோனியாவுடன் இணைந்து தேசிய அரசியலில் பல்வேறு வியூகங்களை வகுத்தவர். ஆனால், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலு சிறை சென்ற பிறகு பீகாரில் ஆர்ஜேடி, காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படத் தொடங்கியது. லாலுவுக்கு துரோகம் செய்து, பாஜவுடன் நிதிஷ் குமார் சேர்ந்த பிறகு 2020 சட்டப்பேரவை தேர்தலில் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் மெகா கூட்டணி களமிறங்கியது. அதில் ஆர்ஜேடி கட்சி 80 சீட்களை வென்று தனிப்பெரும்பான்மை பெற்ற போதிலும், காங்கிரஸ் 70 தொகுதியில் போட்டியிட்டு 19ல் மட்டுமே வென்றது. இதனால்தான் ஆர்ஜேடியால் ஆட்சியை பிடிக்க முடியவில்லை என கூட்டணிக்குள் விரிசல் ஏற்படத் தொடங்கியது.

லாலு போன்ற பக்குவப்பட்ட மூத்த தலைவர் இல்லாததால், ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி முறியும் நிலையே வந்து விட்டது. வரும் 30ம் தேதி நடக்க உள்ள தாராபூர், குஷ்வர் அஸ்தான் ஆகிய 2 தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரசும், ஆர்ஜேடியும் தனித்தனியாக வேட்பாளர்களை களமிறக்கி போட்டியிடுகின்றன. அதோடு, அடுத்த மக்களவை தேர்தலில் பீகாரில் காங்கிரஸ் தனித்து போட்டியிடும் என அறிவித்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில், சிறைவாசம், மருத்துவமனையில் சிகிச்சை என 3 ஆண்டுகளுக்குப் பிறகு லாலு பிரசாத் மீண்டும் பீகாருக்கு திரும்பி உள்ளார்.

பாட்னாவில் அவர் காலடி எடுத்து வைத்ததுமே, ‘காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து நாங்களும் டெபாசிட் இழக்கணுமா? பீகார் மாநில காங்கிரஸ் தலைவர் பக்த் சரண்தாஸ் சரியான முட்டாள்’ என அவர் அளித்த பேட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. லாலுவும் காங்கிரஸ் கூட்டணியை விரும்பவில்லை என பரவலாக பேசப்பட்டது. ஆனால், அடுத்தடுத்த தனது பேட்டிகளில் லாலு, இன்னமும் காங்கிரஸ் கூட்டணியை விரும்புகிறார் என நிரூபித்துள்ளார். ‘கட்சியில் உள்ள சின்னச் சின்ன தலைவர்களால்தான் கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது’ என்ற லாலு, ‘இன்னமும் தேசிய அளவில் பாஜவுக்கு மாற்று காங்கிரஸ் தான்.

காங்கிரசின் சேவை நாட்டுக்கு தேவை’ என கட்சி மேலிடத்துடனான தனது பழைய பாசத்தை காட்டினார். இந்நிலையில், 6 ஆண்டுக்குப் பிறகு லாலு முதல் முறையாக நேற்று இடைத்தேர்தல் நடக்கும் தாராபூர், குஷ்வர் அஸ்தான் தொகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டார். பிரசாரத்தின் கடைசி நாளான நேற்று லாலுவுக்காக பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. லாலுவின் பேச்சை கேட்க திரளான மக்கள் கூட்டம் கூடியிருந்தனர். பிரசாரத்திற்கு புறப்படும் முன்பாக லாலுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசி உள்ளார்.

இது குறித்து கூட்டத்தில் பேசிய லாலு, ‘‘சோனியா காந்தி என்னை போனில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்தார். நான் நலமாக இருப்பதாக கூறினேன். அகில இந்திய அளவில் உள்ள கட்சியின் தலைவரான சோனியா, பாஜவுக்கு எதிராக ஒரே மாதிரி கொள்கைகள் கொண்ட கட்சிகளை கூட்டி கூட்டம் நடத்த வேண்டுமென வலியுறுத்தி உள்ளேன்,’’ என்றார். இதன் மூலம், காங்கிரசின் கூட்டணியை லாலு இன்னமும் விரும்புவதை சுட்டிக்காட்டி உள்ளார். தனது பிரசாரத்தில் காங்கிரசை விமர்சித்து லாலு எதையும் பேசவில்லை.

அதே நேரம், நிதிஷ் குமார் மற்றும் பாஜவை சரமாரியாக தாக்கிப் பேசினார். ‘‘லாலு விரும்பினால் என்னை சுட்டுக் கொல்லட்டும்’ என நிதிஷ் குமார் கூறுகிறார். நான் ஏன் அவரை கொல்ல வேண்டும்? அவரது கர்மவினையே அவரை கொன்று விடும். அவரது அழிவு ஆரம்பமாகி விட்டது. எங்களுக்கு துரோகம் செய்து பாஜ பக்கம் தாவிய நிதிஷின்  அரசியலுக்கு முடிவுரை விரைவில் எழுதப்படும். பீகாரை அவர் வறட்சி மாநிலமாக்கி விட்டார்,’’ என்றார். எனவே, லாலுவின் வரவால் இடைத்தேர்தல் முடிவுக்குப் பிறகு ஆர்ஜேடியுடன் மீண்டும் காங்கிரஸ் இணையும் என அரசியல் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

* பிளார்ட்பார்ம் டிக்கெட் ஐம்பதா?

ஒன்றிய முன்னாள் ரயில்வே அமைச்சரான லாலு நேற்றைய தனது பிரசாரத்தில், ‘‘சமையல் எண்ணெய் இன்று எவ்வளவு விலைக்கு விற்கிறது? பெட்ரோலுக்காக பாக்கெட்டில் இருந்து பணத்தை எடுத்து தரும்போது எவ்வளவு வலிக்கிறது? இதற்கெல்லாம் ஒன்றிய பாஜ அரசுதான் தவறான பொருளாதார கொள்கைகள்தான் காரணம். ரயில் நிலையத்தில் பிளாட்பார்ம் டிக்கெட் ரூ.50க்கு விற்கிறார்கள். இதெல்லாம், நான் ரயில்வே அமைச்சராக இருந்த காலத்தில் நினைத்துகூட பார்க்க முடியாத ஒன்று,’’ என்றார்.

Related Stories:

More
>