டி 20 உலக கோப்பை தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் எழுச்சி பெறுமா?... மற்றொரு போட்டியில் பாகிஸ்தான்-நியூசிலாந்து பலப்பரீட்சை

துபாய்: 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்கா-வெஸ்ட்இண்டீஸ், பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. தற்போது சூப்பர்-12 சுற்று ஆட்டங்கள் நடந்துவரும் நிலையில் இன்று 2 ஆட்டங்கள் நடக்கின்றன. மாலை 3.30 மணிக்கு துபாயில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் வெஸ்ட்இண்டீஸ் அணி, தென்ஆப்பிரிக்காவுடன் (குரூப்-1) மோதுகிறது.

பொல்லார்ட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முதல் ஆட்டத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 55 ரன்னில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. இது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதனால் அந்த அணி எழுச்சி பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளது. பவுமா தலைமையிலான தென்ஆப்பிரிக்க அணி முதலாவது ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது. மார்க்ராம் (40 ரன்கள்) மட்டும் ஓரளவு ஆடினார். மற்ற பேட்ஸ்மேன்கள் சோபிக்கவில்லை.

பந்துவீச்சில் ரபாடா, அன்ரிச் நோர்டியா, கேஷவ் மகராஜ், ஷம்சி ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். பேட்ஸ்மேன்கள் உறுதியுடன் ஆடினால் அந்த அணி எழுச்சி பெறலாம். இந்த ஆட்டத்தில் தோல்வியை சந்தித்தால் அரைஇறுதி வாய்ப்பு மங்கும் என்பதால் இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும். இதுபோல் இரவு 7.30 மணிக்கு சார்ஜாவில் நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் பாகிஸ்தான், நியூசிலாந்து (குரூப்-2) அணிகள் மோதுகின்றன. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தொடக்க ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்திய உற்சாகத்துடன் களம் இறங்குகிறது.

கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி கான்வே, குப்தில், கிளென் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம் போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களுடன் உள்ளது. டிரென்ட் போல்ட், டிம் சவுத்தி, பெர்குசன் ஆகிய சிறந்த பந்துவீச்சாளர்களுடன் கோதாவில் குதிக்கிறது. பயிற்சி ஆட்டத்தில் முழங்கால் காயம் காரணமாக பேட்டிங் செய்யாத வில்லியம்சன் ஆடமுடியாமல் போனால் அந்த அணிக்கு பின்னடைவாகலாம். இரு அணிகளும் சமபலம் வாய்ந்தது என்பதால் இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

Related Stories: