வடகிழக்கு பருவ மழையால் விளைநிலங்கள் பாதிக்காதபடி நடவடிக்கை எடுக்க வேண்டும்-அரியலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அறிவுறுத்தல்

அரியலூர் : அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையால் விளைநிலங்கள் பாதிக்காதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கண்காணிப்பு அலுவலர் ஸ்ரீரமேஷ் சந்த்மீனா அறிவுறுத்தினார்.தமிழ்நாடு முதலமைச்சர் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு அனைத்து மாவட்டங்களிலும் தாழ்வான மற்றும் மழைவெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக கண்டறியப்பட்ட இடங்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அதன் அடிப்படையில், பொதுப்பணித்துறையின் மூலம் சிறப்பு தூர்வாரும் திட்டங்கள், ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் மழைநீர் வடிகால்களை தூய்மைப்படுத்தும் பணி உள்ளிட்டவைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.அதன்படி, அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்காணிப்பதற்காக தமிழக அரசு மூலம் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் ஸ்ரீரமேஷ் சந்த் மீனா, மாவட்ட கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். அதன்படி, அவர், மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி, முன்னிலையில் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

திருமானூர் ஒன்றியத்திற்குட்பட்ட வாரணவாசி கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணிகளை ஆய்வு செய்த கண்காணிப்பு அலுவலர், மழைக்காலத்தில் பெய்யும் அதிகப்படியான மழைநீரானது நீர்நிலைகளுக்கு செல்லும் வகையிலும், குடியிருப்புகளுக்குள் மழைநீர் புகாத வகையிலும் மழைநீர் வடிகால் தூய்மைப்படுத்தும் பணிகளை சிறப்பான முறையில் மேற்கொள்ள தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

அதனை தொடர்ந்து, கீழகாவட்டாங்குறிச்சி கிராமத்தில் பொதுப்பணித்துறையின் சார்பில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் வேட்டக்குடி உபரிநீர் வாய்கால் 4000 மீட்டர் தொலைவில் சிறப்பு தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளதையும், கரைவெட்டி கிராமத்தில் ரூ.17.50 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டி ஓடையில் 5000 மீட்டர் தொலைவில் தூர்வாரும் பணி நடைபெற்றுள்ளதையும், வேட்டக்குடி உபரிநீர் வாய்கால் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் 5000 மீட்டர் தொலைவில் சிறப்பு தூர்வாரும் பணிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அரசு தெரிவித்துள்ளபடி தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மழைக்காலங்களில் மழைநீரானது தங்குதடையின்றி செல்லும் வகையில் கோரைபற்கள் முழுமையாக அகற்றி சீரான முறையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும், வெங்கனூர் கிராமத்தில் ரூ.18 லட்சம் மதிப்பீட்டில் ஆண்டிஓடையில் 5000 மீட்டர் தொலைவில் உபரிநீர் வாய்காலில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு தூர்வாரும் பணிகளையும், கோவில்எசணை கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.5.56 லட்சம் மதிப்பீட்டில் மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தின்கீழ் அமைக்கப்பட்டுள்ள தடுப்பணைகளையும் பார்வையிட்டார். மழைக்காலங்களில் மழைநீரானது சேமிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

அதனைத்தொடர்ந்து, திருமானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மழைக்காலங்களில் சேதமாகும் சாலைகளை சீரமைக்கும் வகையில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் சாலைகளில் விழும் மரங்களை அப்புறப்படுத்தும் வகையில் பயன்படுத்தப்படும் மின் அறுவை இயந்திரங்கள் மற்றும் வெள்ளநீர் உட்புகாத வகையில் தேவையான அளவு மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டார், மழைக்காலங்களில் பொதுமக்கள் மற்றும் விளைநிலங்கள் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அலுவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஸ்ரீரமேஷ் சந்த் மீனா வலியுறுத்தினார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்னுலாப்தீன், திட்ட இய்ககுநர் (ஊரக வளர்ச்சி முகமை) சுந்தர்ராஜன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சந்தானம் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Related Stories: