இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக நீலாங்கரை தலைமை காவலர் கைது

சென்னை: பட்டினப்பாக்கம், சீனிவாசபுரம் குடிசை பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரி (27). இவருக்கு கடந்த 12  ஆண்டுகளுக்கு முன் கபில்தேவ் என்பவருடன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு, கவி (11) என்ற மகளும், சாய் விகாஷ் (5) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில்,  நீலாங்கரை காவல் நிலைய குற்றப்பிரிவில் தலைமை காவலராக பணியாற்றி வரும் பட்டினப்பாக்கம் பகுதியை சேர்ந்த முகிலன் (42) என்பவருடன், விக்னேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியது. இதனால் விக்னேஸ்வரிக்கும், அவரது கணவர் கபில்தேவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். விக்னேஸ்வரி கடந்த ஓராண்டாக முகிலனுடன் ஒன்றாக வசித்து வந்தார். கடந்த 23ம் தேதி இரவு முகிலனும், விக்னேஸ்வரியும் ஒன்றாக வீட்டில் இருந்தனர்.

அப்போது, இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த விக்னேஸ்வரி வீட்டின் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து வந்த பட்டினப்பாக்கம் போலீசார், சடலத்தை கைப்பற்றி, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதற்கிடையே தனது மனைவியை தலைமை காவலர் முகிலன் கொலை செய்துவிட்டு, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடுவதாக முகிலன் வீட்டின் முன் கபில்தேவ் மற்றும் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து காவல் நிலையத்தில் புகாரும் அளித்தனர்.

போலீசார் விசாரணையில், விக்னேஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட போது முகிலன் அவருடன் இருந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே, விக்னேஸ்வரியை தற்கொலைக்கு தூண்டியதாக தலைமை காவலர் முகிலன் மீது வழக்கு பதவு செய்து, அவரை கைது செய்தனர். விக்னேஸ்வரியின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் விக்னேஸ்வரி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரிய வரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

More
>