அதிமுக ஆட்சியில் தவறு செய்த மாஜி அமைச்சர்கள் தண்டிக்கப்பட வேண்டும்: வைகோ பேட்டி

அவனியாபுரம்; அதிமுக ஆட்சியில் தவறு செய்த மாஜி அமைச்சர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று வைகோ தெரிவித்தார். மதுரை விமான நிலையத்தில், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள விமானநிலையத்திற்கு இலங்கை பிரதமர் ராஜபக்சே வருவதை எதிர்க்கிறோம். தற்போது எங்களால் நேரடியாக செல்ல முடியவில்லை. இல்லாவிட்டால் கடந்தமுறை ராஞ்சியில் ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது போல, 1,500 பேருடன் சென்று எதிர்ப்பு தெரிவித்திருப்போம்.

நவ. 1ம் தேதி லண்டனுக்கு செல்லும் கோத்தபய ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க, அங்குள்ள தமிழர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அதிமுக ஆட்சியில் தவறு செய்த முன்னாள் அமைச்சர்கள் தண்டிக்கப்பட வேண்டும். மதிமுகவில் துரை வைகோ முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வாக்கெடுப்பு ஓட்டுப்பெட்டி வைத்து 106 பேரில் 104 பேர் வாக்களித்துள்ளனர். பொதுச்செயலாளர் ஆகிய எனக்கு நேரடியாக நியமனம் செய்யலாம் என்ற அதிகாரம் உள்ளது. இதை வைத்து நேரடியாக நியமனம் செய்து இருக்கலாம்.

கட்சித் தொண்டர்களின் பல்வேறு நிகழ்வுகளில் துரை பங்கேற்றுள்ளார். மாவட்ட செயலாளர்கள் அவருக்கு உரிய பதவி அளிக்க வேண்டும் என கூறியதால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. தனிப்பட்ட முறையில் துரை அரசியலுக்கு வருவதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், கட்சியினர் வரவேற்கின்றனர். அரசியலில் விமர்சனம் வருவது சகஜம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: