மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் ஒத்தி வைப்பு கண்டித்து அதிகாரி காரை முற்றுகையிட்ட மாஜி அமைச்சர் கைது

கரூர்: கரூர் மாவட்ட ஊராட்சி துணைத்தலைவர் தேர்தல் நேற்று காலை 10 மணிக்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதையொட்டி அதிமுக உறுப்பினர்கள் 7 பேர், கூட்டணி கட்சியை சேர்ந்த ஒரு உறுப்பினர் என மொத்தம் 8 பேர் தேர்தல் நடைபெறும் அலுவலகத்திற்கு வாக்களிக்க வந்தனர். தேர்தல் அதிகாரி மந்திராச்சலம், தேர்தல் மாலை 3 மணிக்கு நடைபெறும் என அறிவித்தார். அதனை தொடர்ந்து 3மணிக்கு அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் தேர்தல் நடைபெறும் மாவட்ட ஊராட்சி அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்துவதற்கு சாதகமான சூழ்நிலை தற்போது இல்லை.

அசாதாரணமான சூழ்நிலை உள்ளதால் தேர்தல் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்தார். இதனால் தேர்தல் அதிகாரிக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான விஜயபாஸ்கர் தலைமையில் மாவட்ட கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள் தேர்தல் அதிகாரியின் காரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்ற போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர், 8 மாவட்ட உறுப்பினர்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் போலீஸ் வேனில் ஏற்றி செல்லப்பட்டு அந்த பகுதியில் ஒரு திருமண மண்டபத்தில் அனைவரும் தங்க வைக்கப்பட்டனர்.

Related Stories: