ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய தலைவருக்கான மறைமுக தேர்தல்!: குலுக்கல் முறையில் வெற்றி வாகை சூடினார் திமுக வேட்பாளர் கருணாநிதி..!!

காஞ்சிபுரம்: ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிக்கான தேர்தலில் குலுக்கல் முறையில் திமுக வெற்றி பெற்றிருக்கிறது. தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கு அக். 6, 9  ஆகிய இரு தேதிகளில் இருக்கட்டங்களாக வாக்குப்பதிவானது நடந்து, வாக்கு எண்ணிக்கையானது கடந்த 13ம் தேதி நடைபெற்றது. இதில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர், வார்டு நம்பர் என 4 பதவிகளுக்கு வேட்பாளர்கள் தேர்வு செய்யப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்நிலையில் ஒன்றிய குழு தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.

இதில் திமுக சார்பில் ஸ்ரீபெரும்புதூர் வடக்கு ஒன்றிய செயலாளரும், ஒன்றிய கவுன்சிலருமான கருணாநிதி போட்டியிட்டார். எதிர்தரப்பில் அதிமுக சார்பில் சுயேட்சை வேட்பாளராக வெற்றிபெற்ற எல்லம்மாள் என்பவர் போட்டியிட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி ஏற்பட்டது. மறைமுக தேர்தலில் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஒன்றிய கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இதையடுத்து 16 ஒன்றிய கவுன்சிலர்களில் 8 பேர் திமுகவுக்கும், 8 பேர் அதிமுகவுக்கும் வாக்கு செலுத்தினர்.

இரு வேட்பாளர்களும் சம நிலையில் இருந்ததால் குலுக்கல் முறை நடைபெற்றது. இதில் திமுகவை சேர்ந்த கருணாநிதி வெற்றி வாகை சூடினார். இதன் மூலம் அவர் ஊராட்சி ஒன்றிய தலைவராகிறார். இதனை திமுக தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். திமுகவுக்கு 8 ஒன்றிய கவுன்சிலர்களும், காங்கிரசுக்கு ஒன்று என மொத்தம் 9 பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: