அமரீந்தர் சிங் தொடங்கும் புதிய கட்சி பஞ்சாப் அரசியலில் தாக்கம் ஏற்படுத்துமா?

இந்தியாவின் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள பஞ்சாப் சீக்கியர்களின் ஆதிக்கம் நிறைந்த மாநிலமாகும். பஞ்சாப் மாநிலத்தில் சிரோமணி அகாலி தளம் எனும் மாநில கட்சி கோலோச்சி இருந்தது. அதன் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸ் மக்களிடையே செல்வாக்கு பெற்றது. அக்கட்சியில் 40 ஆண்டுகள் பலமிக்க மூத்த தலைவர் கேப்டன் அமரீந்தர் சிங் 2002ம் ஆண்டு முதல் 2007 வரை பஞ்சாப் முதல்வராக பதவி வகித்தார். பின்னர் இரண்டாவது முறையாக 2017ம் ஆண்டு முதல்வராக பதவியேற்றார்.

ராணுவ அதிகாரியாக இருந்த அமரீந்தர் சிங் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். 2014ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜ வேட்பாளர் அருண் ஜெட்லியை தோற்கடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இதனால் காங்கிரஸ் மேலிடத்திடமும் இவரது மரியாதை உயர்ந்தது. இதையடுத்து, 2017ம் ஆண்டு பஞ்சாப் சட்டமன்ற தேர்தலை இவரது தலைமையில் காங்கிரஸ் சந்தித்தது. அப்போது  மொத்த தொகுதியான 117 இடங்களில் 77 இடங்களை கைப்பற்றியது.  இதனால் அமரீந்தர் தனி செல்வாக்கு பெற்று விளங்கினார்.

பஞ்சாப் மாநில காங்கிரஸ் இவரை மையமாக வைத்து இயங்கி வந்ததால் கட்சி மேலிடமும் இவரது நடவடிக்கையில் தலையிடவில்லை. இதனால், தனது விருப்பம் போல் அமரீந்தர் ஆட்சியை நடத்தினார். அரசு நிர்வாகத்தில் உயரதிகாரிகள் உள்பட அனைத்து நியமனங்களையும் தனது விருப்பப்படியே நிறைவேற்றி வந்தார். இந்நிலையில், பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூர் சாஹிப் குருத்வாராவுக்கு இந்தியர்கள் சென்று வர  பாதை திறக்கப்பட்டது. அப்போது, அமரீந்தர் அமைச்சரவையில் அங்கம் வகித்த நவ்ஜோத் சிங் சித்து பாகிஸ்தான் நாட்டு ஜெனரல் பாஜ்வாவை கட்டித் தழுவினார். இதை முதல்வர் அமரீந்தர் சிங் கடுமையாக விமர்சித்தார்.  

இந்த சம்பவத்தால், இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டது. இதையடுத்து சித்துவின் துறையை மாற்றினார் அமரீந்தர். அதிருப்தியால் சித்து ராஜினாமா செய்தார். பின்னர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத முதல்வர் என்று அமரீந்தரை சொந்த கட்சியில் இருந்து கொண்டே விமர்சித்தார். பாஜ, சிரோமணி அகாலிதளம், ஆம்ஆத்மி ஆகிய எதிர்க்கட்சிகள் செய்ய வேண்டிய பணியை சித்து செய்ததால் அவரை மாநில தலைவராக்கியது காங்கிரஸ் மேலிடம்.

இந்நிலையில், நம்பிக்கை நாயகனாக இருந்த அமரீந்தர் சிங் அரசு பல்வேறு விவகாரங்களை கையாண்டதில் அதிருப்தி அடைந்த எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கினர்.

அதிருப்தி எம்எல்ஏக்களுக்கு ஆலோசகர் பதவியை வழங்கி சமாதானப்படுத்தினார் முதல்வர் அமரீந்தர். இருந்தாலும் கணிசமான எம்எல்ஏக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கு சரிய தொடங்கியது. எம்எல்ஏக்கள் தங்கள் அதிருப்தியை கடிதமாக காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பிவைத்தனர். இதற்கிடையில் கட்சி தலைமை அமரீந்தருடன் ஆலோசிக்காமலேயே எம்எல்ஏக்களை அழைத்து மூன்று முறை ஆலோசனை நடத்தியது. இதனால் கோபமடைந்த அமரீந்தர், ‘என்னை கட்சி அவமானப்படுத்துகிறது. ஆட்சியை வழிநடத்த திறமையற்றவன் என்று மறைமுகமாக கூறுகிறது.

வேண்டுமென்றால் காங்கிரஸ் மேலிடம் தங்களுக்கு நம்பிக்கையானவர்களை முதல்வராக நியமித்துக்கொள்ளலாம் என்று கூறி கடந்த மாதம் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். எனினும், காங்கிரஸ் மேலிடம் இவரை அழைத்து சமாதானப்படுத்த முயற்சிக்கவில்லை. எம்எல்ஏக்களின் நம்பிக்கையை இழந்தவர் எப்படி முதல்வராக தொடரமுடியும் என்று கருத்து தெரிவித்த மேலிடம் தலித் வகுப்பை சேர்ந்த சரண்ஜித் சிங் சன்னியை முதல்வராக்கியது. இதனால், காங்கிரஸ் மேலிடம் மீது கடுப்பாகிய அமரீந்தர், புதுடெல்லி சென்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்தார்.

இதனால், அமரீந்தர் பாஜவில் இணையப்போகிறார் என்று கூறப்பட்டது. ஆனால், இதை அமரீந்தர் மறுத்தார். இந்த சந்திப்பு நிகழ்ந்த சில நாட்களுக்கு பிறகு, தனிக்கட்சி தொடங்க இருப்பதாக அமரீந்தர் அறிவித்துள்ளார். மேலும், பஞ்சாப் மாநில மற்றும் மக்களின் நலன், கடந்த ஓராண்டாக போராடி வரும் விவசாயிகளின் நலன்களை காக்கும் வகையில் புதிய கட்சி தொடங்கி பாஜவுடன் கூட்டணி அமைத்து அடுத்த சட்டமன்ற தேர்தலை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். இதனால் காங்கிரஸ் கட்சியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 அமரீந்தர் சிங் பாஜவுடன் கூட்டணி அமைத்து தன்னைத்தானே அழித்துக்கொள்கிறார். அவர் ஒரு தேச துரோகி என்று காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது போன்று பஞ்சாப் காங்கிரசில் ஏற்பட்டுள்ள உட்கட்சி குழப்பத்தால் பலன் பெறப்போவது ஆம் ஆத்மி கட்சி தான் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 2012ம் ஆண்டு தேர்தலில் சிரோமணி அகாலி தளத்துடன் பாஜ கூட்டணி அமைத்து சட்டமன்ற தேர்தலை சந்தித்தது. அப்போது 68 இடங்களை கைப்பற்றியது.

ஆனால் 2017ம் ஆண்டு இந்த கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம், விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்கள் தான். இதை உணர்ந்து கொண்ட சிரோமணி அகாலி தளம் பாஜ கூட்டணியில் இருந்து வெளியேறியது. ஆனால் விவசாயிகளுக்கு ஆதரவாக இதுவரை எந்த போராட்டமும் அவர்கள் முன்னெடுத்து நடத்தவில்லை என்பதால் அக்கட்சி மதிப்பிழந்துவிட்டது. காங்கிரசில் உட்கட்சி பூசல், குழப்பம் நீடிக்கிறது. தலித் முதல்வர் என்ற பிரசாரம்் அடுத்த ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்க முடியாது.

ஆனால், முதல் தேர்தலிலேயே 20 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சிக்கு மக்களிடம் செல்வாக்கு அதிகரித்துள்ளது. இந்நிலையில், அமரீந்தர் புதிய கட்சி தொடங்குவதை அம்மாநில பாஜ வரவேற்றுள்ளது. அவர் கட்சி தொடங்கியதும் கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது. அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கினால் பஞ்சாப் மாநில அரசியலில் பெரிய தாக்கத்தை கொண்டுவருமா என்ற கேள்விக்கு அடுத்த தேர்தல் முடிவுகள் தான் பதிலளிக்கும்.

* எப்போது தொடக்கம்?

முதல்வர் பதவியை ராஜினாமா செய்த போது அமரீந்தர் சிங் கூறும்போது, ‘40 வயதிலும் 80 வயதுடையவரை போன்ற பக்குவம் பெறவும் முடியும். 80 வயதிலும் இளைஞரை போன்று என்னால் செயல்படவும்  முடியும். எனது அடுத்த கட்ட நடவடிக்கைகளை விரைவில் அறிவிப்பேன்’ என்றார். காங்கிரசில் அமரீந்தர் சிங்கின் ஆதரவாளர்கள் பலர் இருக்கிறார்கள். சில எம்எல்ஏக்களும் இருக்கிறார்கள். தற்போது மவுனமாக நடுநிலை வகித்து வரும் அவர்கள், அமரீந்தர் புதிய கட்சி தொடங்கியதும் அங்கு சென்று ஐக்கியமாகிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இதனால் மாநிலத்தில் காங்கிரஸ் கலகலத்துவிடும் என்ற அச்சம் அக்கட்சி தலைவர்களிடம் ஏற்பட்டுள்ளது.

* சிரோமணி அகாலி தளம் கண்டனம்

அமரீந்தர் சிங்கை தேச துரோகி என்று விமர்சித்துள்ள காங்கிரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள சிரோமணி அகாலி தள தலைவர் மகேஷ்இந்தர் சிங், ‘காங்கிரசுக்கு இ்த்தனை ஆண்டுகள் உழைத்த அமரீந்தர் சிங்கின் அருமை தெரியாமல், அவர் அக்கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கப்போகிறார் என்றதும், அவரை தேச துரோகி என்று காங்கிரஸ் குறிப்பிடுவது கண்டனத்துக்குரியது’ என்றார்.

* பாஜ கணக்கு பலிக்குமா?

முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் புதிய கட்சி தொடங்கினால் அவருடன் பாஜ கூட்டணி அமைத்து வரும் சட்டமன்ற தேர்தலை சந்திக்க தயார் என்று அறிவித்துள்ளது. அமரீந்தர் சிங்குக்கு பஞ்சாப் விவசாயிகளிடம் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. அதே சமயம் அவர் முதல்வராக இருந்த வரை விவசாயிகள் நலனுக்காக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. வேளாண் சட்டங்களை திரும்ப பெறாமல் விவசாயிகளை வஞ்சித்து பஞ்சாப்பில் அவர்களது அதிருப்தியை சம்பாதித்துக்கொண்டுள்ள பாஜ, அமரீந்தர் சிங்கின் செல்வாக்கோடு இணைந்து பயணித்து சட்டமன்ற தேர்தலில் எப்படியும் கணிசமான இடங்களை கைப்பற்றிவிடலாம் என்று கணக்கு போடுகிறது. இந்த கணக்கு நிறைவேறுமா அல்லது பாஜ, அமரீந்தர் சிங் இருவரின் செல்வாக்கும் சரியுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். இவர் புதிய கட்சி தொடங்க பாஜவே நிதியுதவி செய்து காங்கிரசுக்கு எதிராக துருப்பாக பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

Related Stories: