நெடுஞ்சாலை அருகே ஆபத்தான கிணறு: வேலி அமைக்க கோரிக்கை

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அடுத்த நெடுமரம் புதூர் தேசிய நெடுஞ்சாலை அருகே திறந்த நிலையில் அமைந்துள்ள ஆபத்தான கிணறுக்கு தடுப்பு வேலி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் முதல் திருப்புத்தூர் வழியாக மானாமதுரை வரை தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இதில் திருப்புத்தூர் அருகே நெடுமரம் புதூரிலிருந்து புதுக்கோட்டை செல்லும் சாலையில், சில்லாம்பட்டி விலக்குப் பகுதியில் ரோட்டின் மிக அருகில் தண்ணீர் நிரம்பி திறந்த நிலையில் ஆபத்தான கிணறு உள்ளது. மதுரை, மேலூர், சிவகங்கை, திருப்புத்தூர் உள்ளிட்ட பல ஊர்களில் இருந்து கீழச்சிவல்பட்டி, திருமயம், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை உள்ளிட்ட பல ஊர்களுக்கு செல்வதற்கு இந்த வழியாகத்தான் செல்ல வேண்டும்.

மேலும் இப்பகுதியில் இருந்து தினந்தோறும் டூவீலர்கள் பஸ், லாரிகள், வேன் மற்றும் கார்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த ரோட்டில் செல்கிறது. மேலும் இப்பகுதிகளில் உள்ள கிராமங்களைச் சேர்ந்தவர்களும் திருப்புத்தூர் வருவதற்கு இந்த வழியாகத்தான் வரவேண்டும். மேலும் இந்த கிணறு அமைந்துள்ள இடம் ரோட்டின் வளைவு பகுதியாகவும், போதிய வெளிச்சம் இல்லாத பகுதியாகவும் உள்ளது. இப்பகுதியில் வேகமாக வரும் வாகனங்களும், இரவு நேரத்தில் வரும் வாகனங்களும் எதிர்பாராதவிதமாக நிலை தடுமாறினால் இந்த கிணற்றில் விழுந்து விபத்துள்ளாக அதிக வாய்ப்புள்ளது.

இந்த கிணறு ரோட்டில் இருந்து தரை மட்டத்திற்கு இருப்பதால் விபத்து நடக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விபத்து நடந்து உயிர் பலி ஏற்படும் முன் உடனடியாக இந்த திறந்த நிலையில் உள்ள கிணற்றுக்கு அருகே ரோட்டில் தடுப்பு வேலி அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: