உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெற தொழில்நுட்ப முறைகள் கடைபிடிக்க வேண்டும்-வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுனர் ஆலோசனை

தா.பழூர் : அரியலூர் மாவட்டத்தில் 906.45 ஹெக்டர் நிலப்பரப்பில் உளுந்து சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. அவற்றின் உற்பத்தி திறன் ஹெக்டருக்கு 430 கிலோ. எனவே உளுந்து சாகுபடியில் அதிக மகசூல் பெற தொழில்நுட்பங்களை கடைபிடிக்க கிரீடு வேளாண் விரிவாக்க தொழில்நுட்ப வல்லுநர் ராஜ் கலா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

உளுந்து சாகுபடிக்கு ஆடி மற்றும் புரட்டாசிப் பட்டம் மிகவும் ஏற்றது. ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை போதுமானது ஆகும்.

உளுந்து சாகுபடியில் அதிக விளைச்சல் பெற தகுந்த உயர் விளைச்சல் இரகங்களை தேர்வு செய்ய வேண்டும். ஆடி மற்றும் புரட்டாசி பட்டத்திற்கு ஏற்ற இரகங்கள் வம்பன் 6,8,11 மற்றும் கோடைக்கால பருவத்திற்கு ஆடுதுறை 5 ஆகும்.உளுந்து பயிருக்கு வரிசைக்கு வரிசை 30 செ.மீ. செடிக்கு செடி 10 செ.மீ. இடைவெளி தேவை. விதைத்த 15 நாட்களில் செடிகளை களைத்து சதுரமீட்டருக்கு 33 செடிகள் என்ற அளவில் பராமரிப்பதன் மூலம் செடிகள் நன்கு கிளைத்து அதிக காய்கள் பிடிக்க ஏதுவாகிறது.

இலைவழி உரம்: பூக்கள் தோன்றிய உடன் வேர்கள் மூலம் சத்துக்கள் எடுக்கும் தீவிரம் குறைந்து விடும். எனவே போதுமான சத்து வழங்க இலைவழி மூலம் டி.ஏ.பி. 2 சதவீதம் தெளிக்க வேண்டும். அதாவது ஏக்கருக்கு 4 கிலோ டி.ஏ.பி. உரத்தை 10 லிட்டர் நீரில் முதல் நாள் இரவே ஊற வைக்க வேண்டும். அடுத்த நாள் கரைசலை துணியால் நன்கு வடிகட்டி காலை அல்லது மாலை வேளைகளில் உளுந்து விதைக்க 25வது மற்றும் 40வது நாளில் தெளிக்க வேண்டும். அதனால் பூக்கள் உதிர்வதை தடுப்பதுடன், பயிர்கள் திரட்சியாக மணி பிடித்து கூடுதல் மகசூல் பெறலாம்.

பயறு வகைகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் கலந்த பூஸ்டர் பயறு ஒண்டர் என்ற வளர்ச்சி ஊக்கியை ஏக்கருக்கு 2.25 கிலோவை 200 லிட்டர் நீரில் கரைத்து பூக்கும் பருவத்தில் தெளிக்கவும்.இப்புதிய மருந்தினை உபயோகிக்கும் போது டி.ஏ.பி. கரைசல் தெளிக்கத் தேவையில்லை.இறவை பயிருக்கு விதைத்தவுடன் ஒரு தண்ணீரும் பிறகு உயிர் தண்ணீர் 3வது நாளிலும் பாய்ச்ச வேண்டும். காலநிலை மற்றும் மண்ணின் தன்மைக்கேற்ப 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் கட்ட வேண்டும்.

மஞ்சள் தேமல் நோய் ஒரு வைரஸ் நோயாகும். இதனைக் கட்டுப்படுத்த உழவியல் முறையாக பாதிக்கப்பட்ட செடிகளை உடனடியாக பிடுங்கி களைதல் வேண்டும்.வேரழுகலை உயிரியல் முறையில் கட்டுப்படுத்த பேசில்லஸ் சப்டிலிஸ் அல்லது டிரைகோடெர்மா விரிடியை ஏக்கருக்கு 10 கிலோ என்ற அளவில் மக்கிய தொழு உரம் அல்லது மணலில் கலந்து விதைத்த 30 நாட்கள் கழித்து மண்ணில் இட வேண்டும் அல்லது வேப்பம் புண்ணாக்கு ஒரு ஏக்கருக்கு 50 கிலோ இட வேண்டும்.

உளுந்தில் காய்கள் பச்சை நிறத்திலிருந்து கறுப்பு நிறமாக மாறும் தருணம் தான் அறுவடைக்கு உகந்தது. அறுவடை செய்த காய்களை நிழலில் இரண்டு நாட்களுக்கு நன்கு உலர்த்தி பின்னர் மூங்கில் கழி கொண்டு அடித்து விதைகளை பிரித்து எடுக்க வேண்டும்.மேற்கண்ட தொழில்நுட்பங்களை விவசாயிகள் கையாண்டு உளுந்து சாகுபடி செய்வதால் அதிக மகசூல் பெறலாம் என தெரிவித்துள்ளார்.

Related Stories: