மதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் துரை வைகோவுக்கு புது பதவி: வைகோ இன்று மாலை அறிவிக்கிறார்

சென்னை: மதிமுகவில் துரை வைகோவுக்கு துணை பொதுச்செயலாளர் பதவி வழங்குவது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இன்று முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இது தொடர்பாக வைகோ இன்று மாலை அறிவிப்பு வெளியிடுகிறார் என்று மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன், துரை வைகோவின் அரசியல் பயணம் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் கூட மதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு  ஆதரவாக பிரசாரம் செய்தார். தொடர்ந்து சட்டப்பேரவை தேர்தலிலும், தற்போது உள்ளாட்சி தேர்தலிலும் துரை வைகோ பிரசாரம்  செய்தார். அவரது பிரசார வியூகத்தால் மதிமுக மற்றும் கூட்டணி கட்சிகள் பல இடங்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் வைகோ பிறந்தநாளில் கூட  அவருக்கு பதவி வழங்குவது தொடர்பாக எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் கருத்து  தெரிவித்தனர். ஆனால், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தனது மகன் துரை வைகோ தன்னை போன்று கஷ்டப்பட வேண்டாம் என்பதற்காக அரசியலுக்கு வர விரும்பவில்லை என்று கூறியுள்ளார். ஆனால், துரை வைகோ அரசியலுக்கு வர வேண்டும் என கட்சியினர் விரும்புகின்றனர். இது தொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்னர் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் பலரும் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.  

இந்த பரபரப்பான சூழ்நிலையில் மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் உயர்நிலைக்குழு,  மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள், தலைமைச் செயலாளர்கள் கூட்டம் இன்று காலை 10 மணியளவில் மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் மக்கள் விரோத போக்கை கடைபிடிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக  மதிமுக சார்பில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. இதை தொடர்ந்து மதிமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி காலியாகவுள்ளது. இப்பதவிக்கு துரை வைகோவை நியமிப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படுகிறது. இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவு தொடர்பாக வைகோ இன்று மாலை 4 மணியளவில் முக்கிய அறிவிப்பு வெளியிடுகிறார் என்று மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories: