இளம்பெண்ணை அடித்து கொன்று காட்டில் புதைத்த வாலிபர் கைது

கும்பகோணம்: இளம்பெண்ணை அடித்து கொன்று கருவ காட்டில் புதைத்த வாலிபர் கைது செய்யப்பட்டார். தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சிவபுராணி கிராமத்தை சேர்ந்தவர் டேவிட் ஆரோக்கியசாமி. வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி அனிதா(32). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். அனிதா குழந்தைகளுடன் மானம்பாடி கிராமத்தில் தந்தை சேவியர் வீட்டில் வசித்து வந்தார். தினமும் குழந்தைகளையும் மானம்பாடி அருகே திருப்பனந்தாளில் கணினி வகுப்புக்கு அழைத்து செல்வார். அப்போது அதே பகுதியில் பிரவுசிங் சென்டர் நடத்தி வரும் கார்த்திக்(30) என்பவருடன் அனிதாவுக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் கார்த்திக் அனிதாவிடம் இருந்து ரூ.3 லட்சம் வாங்கியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 12ம் தேதி அனிதா, வழக்கம் போல் மானம்பாடி அருகே கணினி வகுப்பிற்கு குழந்தைகளை அழைத்து சென்றுள்ளார். அப்போது குழந்தைகளை அங்கேயே விட்டுவிட்டு சென்ற அனிதா மீண்டும் வீடு திரும்பவில்லை.

நீண்ட நேரமாகியும் குழந்தைகள் வராததால் சேவியர் சென்று கணினி வகுப்பிலிருந்து குழந்தைகளை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளார். மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து திருப்பனந்தாள் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் அனிதாவின் செல்போனில் உள்ள எண்கள் மூலம் கார்த்திக்கை போலீசார் பிடித்து விசாரணை நடத்தியதில், அனிதாவிடம் கார்த்திக் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை கொடுத்து வந்துள்ளார். அவர் பணம் கொடுக்க மறுத்ததால் சம்பவத்தன்று அனிதாவிடம் வெளியே செல்லலாம் என்று கூறி அழைத்து சென்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அனிதாவை கார்த்திக் அடித்து கொன்றுள்ளார். பின்னர் அவரது உடலை குமரன்குடி சுடுகாட்டில் உள்ள கருவக்காட்டில் புதைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, அனிதா புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து, நேற்று மாலை அவரது சடலம் தோண்டி எடுக்கப்பட்டது. அந்த இடத்திலேயே கும்பகோணம் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பிரேத பரிசோதனை செய்தனர்.  இதைடுத்து கார்த்திக் கைது செய்யப்பட்டார். மேலும் கார்த்திக்கின் தந்தை பொன்னுசாமி, சகோதரர் சரவணன், மனைவி சத்யா ஆகியோரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More
>