குருமாம்பேட்டில் 7.42 லட்சம் கியூபிக் மீட்டர் குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் திட்டம் துவக்கம்: 12 மாதத்துக்குள் அகற்ற அறிவுறுத்தல்

புதுச்சேரி: புதுச்சேரி குருமாம்பேட் குப்பை கிடங்கில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை பயோ மைனிங் முறையில் அகற்றும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி நகர பகுதியில் தினமும் 350 டன் வரையும், பண்டிகை காலங்களில் கூடுதலாக 100 டன் வரையும் குப்பை சேருகின்றது.. இந்த குப்பைகள் லாரிகள் மூலம் சேகரிக்கப்பட்டு குருமாம்பேட்டில் உள்ள 23 ஏக்கர் பரப்பளவு கொண்ட குப்பை கிடங்கில் கொட்டப்பட்டு வருகிறது. இந்த குப்பை கிடங்கை உழவர்கரை நகராட்சி பராமரித்து வருகிறது.

இங்கு கடந்த 2005ம் ஆண்டு முதல் குப்பை கொட்டப்பட்டு வருவதால் 7.42 லட்சம் கியூபிக் மீட்டர் அளவுக்கு மலைபோல் குவிந்து கிடக்கிறது. இதனை அறிவியல் ரீதியாக கையாளாமல், அப்படியே குப்பைகள் குவிக்கப்படுவதால் பலவேறு சுற்றுச்சூழல் பிரச்னைகள் ஏற்பட்டு வருகிறது. அதோடு தமிழகத்தின் எல்லையோர கிராமங்களான பெரம்பை, நாப்பாளையம் உள்ளிட்ட கிராம மக்கள் உடல்நல பாதிப்புகளால் அவதிக்குள்ளாகி வந்தனர். குப்பை கிடங்கில் அவ்வப்போது ஏற்படும் தீ விபத்துகளால் மூச்சு திணறல் ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.

இது தொடர்பாக பசுமை தீர்ப்பாயத்தில் தொடரப்பட்ட வழக்கில் குப்பைகளை அகற்ற உத்தரவிட்டது. மேலும் தமிழக அரசும் குப்பை கிடங்கை அகற்றுமாறு கடிதம் எழுதியிருந்தது. இதற்கிடையே புதுச்சேரி உள்ளாட்சித்துறை மலை போல் குவிந்துள்ள குப்பைகளை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கு துணை நிலை ஆளுநரின் ஒப்புதலும் கிடைத்து ஆரம்ப கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஈரோட்டை சேர்ந்த சிக்மா குளோபல் என்வைர்ன்மென்ட் சொல்யூஷன் நிறுவனத்திடம் இப்பணிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

பயோ மைனிங் முறையில் மலைபோல் குவிந்து கிடக்கும் குப்பைகள் குறிப்பிட்ட நுண்ணுயிரிகள் தொழில் நுட்பத்துக்கு உட்படுத்தப்படும். இதன்மூலம் குப்பையில் உள்ள இரும்பு, கல், கண்ணாடிகள் பிரித்து சிமெண்ட் உருவாக்கத்துக்கு பயன்படுத்திக்கொள்ளப்படும். இப்பணிகளுக்காக அரசு ஒரு டன்னுக்கு ரூ. 770 சம்மந்தப்பட்ட நிறுவனத்துக்கு வழங்கும். இந்த தொகையை பயன்படுத்தி, 23 ஏக்கரில் உள்ள அனைத்து குப்பைகளை அகற்றிவிட்டு வெற்று நிலமாக திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதே இந்த ஒப்பந்தம்.

அதன்பிறகு அந்த இடத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை அரசு துவங்கும். அதற்கேற்ப உள்கட்டமைப்பு வசதிகளுடன் குப்பைகள் தரம்பிரிக்கப்பட்டு, உடனுக்குடன் அப்புறப்படுத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து உள்ளாட்சிதுறை அதிகாரிகளிடம் கேட்டபோது: பயோ மைனிங் முறையில் குருமாம்பேட்டில் குவிந்து கிடக்கும் குப்பைகளை இந்த ஆண்டு ஜூலை மாதத்தில் இருந்து 12 மாதத்துக்குள்ளாக சம்மந்தப்பட்ட நிறுவனம் அகற்றி வெறும் நிலத்தை அரசிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும். இதற்கான பணிகள் துவங்கி நடந்து வருகிறது.

அதன்பிற்கு அதே இடத்தில் குப்பைகளை குவிக்காமல், உடனுக்குடன் தரம்பிரிக்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படும். ரூ. 42 கோடியில் மத்திய அரசின் நிதியுதவியுடன் இத்திட்டம் செயல்பாட்டுக்கு வரும். ஒரே நேரத்தில் இவ்வளவு குப்பைகளையும் அகற்ற முடியாது என்பதால் நவீன உயிரி தொழில் நுட்பம் மூலம் (பயோ-மைனிங்) அகற்ற இத்திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் மக்களுக்கு எவ்வித சுற்றுச்சூழலும் பாதிக்காத வகையில் குப்பைகள் அகற்றப்படும் என்றனர்.

Related Stories: