பருவமழை துவங்க உள்ளதால் பாசனத்துக்காக கோமுகி அணையை திறக்க வேண்டும்: சம்பா பருவ விவசாயிகள் எதிர்பார்ப்பு

சின்னசேலம்: கல்வராயன்மலையடிவாரத்தில் உள்ள கோமுகி அணை சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் 46 அடிவரை நீரை தேக்கி வைக்கும் வகையில் கட்டப்பட்டது. இதில் ஆற்றுப் பாசனத்தின் மூலம் 5,860 ஏக்கர் விவசாய நிலமும், பிரதான கால்வாய் பாசனத்தின் மூலம் 5,000 ஏக்கர் விவசாய நிலமும் பாசன வசதி பெறுகிறது. கோமுகி அணையின் மூலம் கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளை சேர்ந்த 70க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாய மக்கள் பயன்பெற்று வருகின்றனர்.

மேலும் கோமுகி ஆற்றின் குறுக்கே சோமண்டார்குடி, கச்சிராயபாளையம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 11 இடங்களில் அணைகள் கட்டப்பட்டு, அதன் மூலம் ஏரிகளில் நீரை நிரப்பியும் விவசாயம் செய்கின்றனர். கோமுகி ஆற்றின் கரையோர கிராமங்களுக்கும் குடிநீர் வசதி கிடைக்கிறது. கடந்த 30 ஆண்டுகளுக்குமுன்பு வரை பருவமழை தொடர்ந்து பெய்து வந்ததால் சம்பா பருவத்துடன் சேர்த்து 3 போகமும் நெல் அறுவடை செய்தனர். அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு ஆண்டும் சம்பா பருவ சாகுபடிக்கு கோமுகி அணை பாசன விவசாயிகளின் நலன்

கருதி அக்டோபர் முதல் வாரத்தில் கோமுகி அணை திறக்கப்படுவது வழக்கம்.

காலப்போக்கில் பருவமழை சரிவர பெய்வதில்லை. குறிப்பாக கல்வராயன்மலையில் போதிய மழை பெய்யாததால் கோமுகி அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால் அக்டோபர் துவக்கத்திலேயே நிரம்பி வழிய வேண்டிய அணையில் தற்போது வரை 38.5 அடி நீர்மட்டமே உள்ளது. மேலும் அணைக்கு 145 கனஅடி நீர்வரத்து உள்ளது. கோமுகி அணை நிரம்பாததால் அணை திறப்பு தள்ளிப்போகிறது. இதனால் கோமுகி அணை பாசனத்தை நம்பி உள்ள விவசாயிகள் நாற்றுவிட தயக்கம் காட்டி வருகின்றனர்.

கிணறு உள்ள ஒருசில விவசாயிகள் மட்டுமே நாற்றுவிட்டு வயலை உழ தயார் நிலையில் உள்ளனர். இனிவரும் காலங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அப்போது அணையும் நிரம்பி வழியும் நிலை ஏற்படும். ஆகையால் மாவட்ட நிர்வாகம் இதை கருத்தில் கொண்டு இருக்கும் நீரை பாசனத்திற்கு திறக்க வேண்டும் என்று சம்பா பருவ விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: