செல்போன் ஸ்டேட்டஸ், வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் குவியுது ஆர்டர்: லண்டன் பறக்கும் பனை ஓலை மணமாலை

* சாதிக்கும் ராமநாதபுரம் மாவட்ட சுயஉதவி குழு பெண்கள்

* பிளாஸ்டிக்கிற்கு விடைகொடுத்து இயற்கையில் கலைநயம்

ராமநாதபுரம்: மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பனை ஓலையை கொண்டு கலைநயமிக்க பொருட்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து ராமநாதபுரம் அருகே கிராமப்புற பெண்கள் வருவாய் ஈட்டி வருகின்றனர். தமிழகத்தில் அதிகளவு பனை மரங்களை கொண்ட மாவட்டம் ராமநாதபுரம். இங்கு பனை ஓலைகள் உட்பட பனைமரத்தில் இருந்து கிடைக்கும் அனைத்து பொருட்களையும் பயன்பாட்டுக்குரியதாக இந்த மாவட்டப் பெண்கள் மாற்றி வருகின்றனர்.

ராமநாதபுரம் அருகே தினைக்குளம் கிராம பெண்கள் பனை மர குருத்து ஓலையை தனியாக பிரித்து பல வண்ணங்கள் சேர்த்து பிளாஸ்டிக் பயன்பாட்டை மக்கள் தவிர்க்கும் வகையில் பெட்டி, கூடை, நலங்கு பெட்டி, சடங்கு பெட்டி, மணமக்கள் பூமாலைகள், கிளி சரம் நிலை மாலை, பூங்கொத்து, தாம்பூலத்தட்டு, கிலுகிலுப்பை, பூஜை பொருட்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரித்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருவாய் ஈட்டி வருகின்றனர்.

சுமார் 10 பேர் கொண்ட மகளிர் குழுவினர் கலைநயப்பொருட்களை தயாரித்து சென்னை, தூத்துக்குடி வழியாக வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகின்றனர். தினைக்குளம், குத்துக்கல்வலசை, களிமண்குண்டு, வண்ணாங்குண்டு பகுதி பெண்கள் பனை ஓலைகளில் அதிகமான கலைப்பொருட்கள் தயாரித்து வருகின்றனர். மேலும் வங்கி மூலம் தன்னார்வ பயிற்சி வகுப்புகள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் பங்கேற்று பனை ஓலைகள் மூலம் புதிய பொருட்கள் தயாரிக்க விரும்பும் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

இப்பெண்கள் தயாரித்த பனை ஓலையால் தயாரான மணமக்கள் மாலைகளுக்கு வெளிநாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. திருமண விழாக்களில் மணமக்கள் பயன்படுத்தும் மாலைகள் பூக்களால் கட்டப்படுகிறது. ஆனால், பனை ஓலைகளாலான மணமாலைகள் ஆண்டுகள் கடந்தும் வாடாமல், அதே நேரத்தில் எந்த சேதாரமுமின்றி திருமண நிகழ்வை ஆண்டாண்டு காலம் நினைவுகூரும் வகையில் இருக்கும். மண்ணை மலடாக்கும் பிளாஸ்டிக்கிற்கு குட்பை சொல்லும் வகையில் இங்கு தயாராகும் பனை ஓலை பொருட்களுக்கு தற்போது கிராக்கி அதிகரித்துள்ளது.

இங்கே தயாராகும் இம்மாலைகளின் புகைப்படங்களை பெண்கள் தங்கள் செல்போன் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ், வாட்ஸ்அப் குழுக்களில் பதிவு செய்து அதன் மூலம் பனை ஓலை கலை நயப் பொருட்களை சந்தைப்படுத்தும் புது உக்தியை கையாளுகின்றனர். இதனால் கடந்த ஒரு மாதத்தில் 10 பனை ஓலை மணமாலை ஆர்டர் கிடைத்து லண்டனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், வடமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து இவர்களுக்கு மணமாலைகள் மற்றும் பனை ஓலை கலை நய பொருட்களுக்கு ஆர்டர்கள் வந்த வண்ணம் உள்ளது.

வண்ணமும் இயற்கையே

பனை ஓலைகளில் ஆன பாரம்பரிய பொருட்களை மக்கள் தற்போது அதிகளவில் விரும்பி பயன்படுத்துகின்றனர். சமைத்த உணவு பொருட்களை பனை ஓலைப்பெட்டிகளில் போட்டு வைத்தால் உணவு விரைவில் கெடுவதை தடுக்க முடியும் என்று இதனை தயாரிக்கும் கிராமப் பெண்கள் கூறுகின்றனர். இப்பெண்கள் தயாரிக்கும் பொருட்களில் நிறத்திற்காக ரசாயன கலவைகள் சேர்க்காமல் இயற்கை முறையில் கேரட், பீட்ரூட், சமையல் பொருட்களை பயன்படுத்தி நிறத்தை உருவாக்குகின்றனர். பனை ஓலை கலைநய பொருட்களுக்கு அதிக வரவேற்பு உள்ளதால் ஆண்களின் வருமானத்தை எதிர்பாராமல் இந்த பெண்கள் சுயமாக சம்பாத்யம் ஈட்டி வருவதால் இவர்களின் குடும்ப வாழ்வாதாரம் உயர்ந்து வருகிறது.

Related Stories: