காளையார்கோவிலில் ஆசிரியர் பயிற்சி பள்ளி விடுதிகள் இடியும் அபாயம்: சமூக விரோதிகளும் தஞ்சம்

காளையார்கோவில்: காளையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஆசிரியர் பயிற்சி பள்ளி உள்ளது. இதற்காக 1998ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு தங்கும் விடுதி கட்டப்பட்டது இவ்விடுதியில் மாணவ, மாணவிகளுக்குத் தனித் தனியாக கட்டிட வசதிகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் மாணவர்கள் சேர்க்கை அதிகமாக இருந்து வந்தது. 2013ம் ஆண்டு வரை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் விடுதியில் தங்கிப் படித்து வந்தனர்.இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக மாணவர் சேர்க்கை குறைந்து வந்தது. இதனால் விடுதி மற்றும் பயிற்சி பள்ளியைக் கவனிக்காமல் பூட்டிய நிலையில் கடந்த ஐந்தாண்டுகளுக்கு மேல் எந்தப் பயன்பாடும் இல்லாமல் உள்ளது. அத்துடன் பராமரிப்பு இல்லாதாதால் பாழடைந்த நிலையில் உள்ளது. மராமத்து செய்யாததால் தற்போது இடிந்து விழும் நிலையில் உள்ளது.

பள்ளியில் படிக்கும் மாணவர்களின் விளையாட்டு மைதானம் இப்பகுதியில் உள்ளதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்குள் மிகவும் மோசமான நிலையில் உள்ள இக்கட்டிடங்களை அகற்றச் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் பள்ளியைச் சுற்றி காம்பவுண்ட் சுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதச்செயல்கள் நடக்கும் இடமாக விடுதிக்கட்டிடம் மாறி வருவதாகவும் குற்றம் சாட்டுகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர் தெய்வீகசேவியர் கூறுகையில், அரசு மேல்நிலைப்பள்ளி அருகே ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் விடுதி பல ஆண்டுகளாக பயன்பாடு இல்லாமல் உள்ளது, பாழடைந்த நிலையில் உள்ள கட்டிடங்களை இடித்து மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு உள்அரங்கம், நூலகம், மதிய உணவு அருந்தும் இடம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், சுகாதார கழிப்பிடம், போன்றவற்றை கட்டித்தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Related Stories: