சினிமா ஆசைகாட்டி பல பெண்களை சீரழித்த ‘டுபாக்கூர்’ இயக்குநர் கைது: செல்போனில் நூற்றுக்கணக்கான வீடியோக்கள்; பல லட்சம் பணம் பறித்து சொகுசு வாழ்க்கை

ராமநாதபுரம்: சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி பல பெண்களை சீரழித்து, வீடியோ எடுத்து மிரட்டி பல லட்சம் பணம் பறித்த டுபாக்கூர் இயக்குநர் ராமேஸ்வரம் போலீசில் சிக்கினார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியை சேர்ந்தவர் சக்தி (எ) இமானுவேல் ராஜா (43). கடந்த 40 நாட்களுக்கு முன் சினிமா எடுப்பதாக கூறி ராமேஸ்வரத்தில் 7 விடுதிகளில் அறைகள் முன்பதிவு செய்துள்ளார். அவர் தனியாக நட்சத்திர விடுதி ஒன்றில் தங்கினார். பின்னர் சினிமா ஷூட்டிங்கிற்காக இடம் தேர்வு செய்யப்போவதாக பாம்பனை சேர்ந்த பைனான்சியர் ஒருவருடன் தனுஷ்கோடி சென்றார். அங்கு கார்த்திக்ராஜா என்பவரை சந்தித்து பூசாரி வேடத்தில் நடிக்க ஆள் தேவை எனவும், அதற்கு சம்பளமாக ரூ.10 லட்சம் தருவதாகவும் கூறினார்.

இதில் மயங்கிய கார்த்திக்ராஜா, தன்னுடன் மனைவியையும் நடிக்க வைக்க இமானுவேல் ராஜாவிடம் வாய்ப்பு  கேட்டார். இதை சாதகமாக பயன்படுத்தி, சினிமா எடுக்க பணம் குறைவாக உள்ளதால், ஒரு லட்சம் தருமாறு கேட்டுள்ளார். இதை நம்பி அவர்  ஒரு லட்சம் கொடுத்தார். இதையடுத்து இமானுவேல் ராஜா, தங்கியிருந்த விடுதியில் சினிமா நடிகர் தேர்வு நடைபெறுவதாக கூறி கார்த்திக் ராஜாவை வர சொன்னார். அப்போது இமானுவேல் ராஜா அறையில் தங்கியிருந்த வெளி மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண், ‘‘இமானுவேல் ராஜாவை நம்ப வேண்டாம். சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறி என்னை போல் பல பெண்களை ஏமாற்றியுள்ளார். என்னிடமும் நகை, பல லட்சம் பணம் பறித்து விட்டார்’’ என கூறினார்.

இதனால், கார்த்திக் ராஜா தன்னிடம் வாங்கிய பணத்தை திரும்ப பெற இமானுவேல் ராஜா தங்கி இருந்த விடுதி அறைக்கு சென்றார். அப்போது அங்கு ஒரு மேஜையில் துப்பாக்கி இருந்தது. இதனால் அச்சம் அடைந்த கார்த்திக் ராஜா, ராமேஸ்வரம் நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து கியூ பிரிவு போலீசார் இமானுவேல் ராஜாவை தேடி விடுதிக்கு சென்றனர். அதற்குள் அவர் அறையை காலி செய்து விட்டு ராமேஸ்வரம் பஸ் நிலையத்தில் நின்றபோது, போலீசார் மடக்கி கைது செய்தனர்.

அறையில் இருந்த துப்பாக்கி சிகரெட் லைட்டர் என தெரிந்தது. பின்னர் இமானுவேல் ராஜாவை, ராமேஸ்வரம் டவுன் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவர் வைத்திருந்த ஏடிஎம் கார்டுகள், காசோலைகள், கவரிங் செயின், கவரிங் தோடு ஒரு ஜோடி, ஆன்ட்ராய்ட் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். செல்போன்களை ஆய்வு செய்தபோது, அதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களின் ஆபாச வீடியோக்கள் மற்றும் பெண்களுடன் இமானுவேல் ராஜா உல்லாசமாக இருந்த வீடியோ, போட்டோக்கள் இருந்தன.

போலீஸ் விசாரணையில் கிடைத்த தகவல்கள் வருமாறு: இமானுவேல் ராஜா, பெண்களுடன் உல்லாசம் அனுபவிக்க விரும்பி ‘‘கால் கேர்ள்’’ என்ற இணைய பக்கம் மூலம் பதிவு செய்துள்ளார். பதிவிற்கு விருப்பம் தெரிவித்த 2 பெண்களுடன் அறை எடுத்து தங்கி தன்னை சினிமா இயக்குநர் என அறிமுகம் செய்துள்ளார். தொடக்கத்தில் பணம் கொடுத்து உல்லாசமாக இருந்த இமானுவேல் ராஜா, சினிமாவில் நடிக்க வைப்பதாக ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பிய அந்த 2 பெண்களையும் அவர்களது தோழிகளையும் பல சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்து சென்று பணம்  கொடுக்காமல் தான் விரும்பியபோதெல்லாம் உல்லாசம் அனுபவித்து வந்தார்.

புதுமுக நடிகைகள் தேவைப்படுவதால், இளம்பெண்கள் இருந்தால் தன்னிடம் அறிமுகப்படுத்துமாறு அப்பெண்களிடம் இமானுவேல் ராஜா கூறினார். இதற்கு கமிஷன் தருவதாகவும் ஆசைவார்த்தை கூறினார். இதை நம்பிய பெண்கள் தங்களுக்கு தெரிந்த டிக் டாக் பிரபலம், கணவரால் கைவிடப்பட்டோர், கணவரை இழந்த பெண்கள், சினிமா மோகம் கொண்ட இளம்பெண்களை அழைத்து வந்தனர். சினிமா திரைக்கேற்ற முகத்தோற்ற மாடலிங் போட்டோ தேவை என கூறி அரை நிர்வாணமாக பல்வேறு கோணங்களில் இளம்பெண்களை படம் பிடித்து அவர்களுடன் விடுதியில் உல்லாசமாக இருந்துள்ளார்.

கேமராவில் பதிவு செய்து அதனை காட்டி பல பெண்களை இமானுவேல் ராஜா சீரழித்துள்ளார். இவர்களில் பல பெண்களை மிரட்டி லட்சக்கணக்கில் பணம் பறித்து சொகுசு வாழ்க்கை அனுபவித்து வந்தது தெரியவந்தது. மேலும் புதுரோடு பகுதி சென்ற இமானுவேல் ராஜா, தான் தொண்டு நிறுவனம் நடத்தி வருவதாகவும், மகளிர் குழுவினருக்கு வங்கி மூலம் கடன் வாங்கி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறி வங்கி கணக்கு தொடங்க ஒரு சிலருக்கு பண உதவி செய்தார். இதை நம்பி இவரை அணுகிய பெண்கள் பலரிடம் ரூ.1.50 லட்சம் வரை மோசடி செய்தது விசாரணையில் தெரிய வந்தது. ஏற்கனவே, இவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து கார்த்திக் ராஜா, சரவணன், முனீஸ்வரி ஆகியோரின் புகாரின்படி இமானுவேல் ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: