அதிமுக மாவட்ட செயலாளர் ரகளை: 1 மணி நேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தம்

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடந்தது. இதையொட்டி, மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையொட்டி உள்ள தனலட்சுமி சீனிவாசன் தனியார் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் வாக்குப் பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. இதனை தொடர்ந்து நேற்று வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. அப்போது, அதிமுகவை சேர்ந்த மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்கு எண்ணும் அதிகாரிகளிடம் அடிக்கடி குழப்பம் ஏற்படுத்தி, தங்களுக்கு சாதகமாக செயல்பட வேண்டும் என்ற கோணத்தில், அங்கிருந்த அதிகாரிகளுக்கு தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதை பார்த்ததும், அங்கிருந்த திமுகவினர், ஆறுமுகம் மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் தட்டிக்கேட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அதிமுக மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் திடீர் என திமுகவினர் மீது தாக்குதல் நடத்தினர். இதனால் வாக்கு எண்ணும் மையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுக  மாவட்ட செயலாளர் ஆறுமுகம் மற்றும் அவரது தரப்பினரை கைது  செய்யக் வேண்டும் என அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரிடம் திமுகவினர் கோரிக்கை வைத்தனர். பின்னர் கோஷமிட்டு, வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், சுமார் 1 மணிநேரம் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது. பின்னர் போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர். இந்த சம்பவத்தால் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: