விஜயதசமியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை கோயில்கள் திறக்கப்படுமா? முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை

சென்னை: வரும் வெள்ளிக்கிழமை விஜயதசமியை முன்னிட்டு, கோயில்களை திறப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அக்டோபர் 31ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கை ஒட்டி கூட்ட நெரிசலை தவிர்க்க வழிபாட்டு தலங்களை வெள்ளி, சனி, ஞாயிறு திறக்க தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வருகிற வியாழன் (நாளை) ஆயுத பூஜை, விஜயதசமியை (வெள்ளி) முன்னிட்டு, இந்து கோயில்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, வரும் வெள்ளிக்கிழமை கோயில்களை திறக்க தமிழக அரசு முடிவு செய்து கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அப்போது, வருகிற வெள்ளிக்கிழமை விஜயதசமியை ஒட்டி பக்தர்கள் வழிபடுவதற்கு வசதியாக கோயில்களை திறக்க அனுமதி அளிக்கலாமா, வேண்டாமா என்பது குறித்து ஆலோசனை நடத்துகிறார்.

மேலும், வருகிற நவம்பர் 1ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகளை திறக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தினசரி 1300 கீழ் குறைந்துள்ளதால் ஊரடங்கில் மேலும் தளர்வுகள் அளிப்பது குறித்தும், வருகிற ஆயுதபூஜை,  தீபாவளி, கிறிஸ்துமஸ் பண்டிகைகளை ஒட்டி பொது இடங்களில் கூட்டத்தை தவிர்ப்பது குறித்தும் இன்று நடைபெறும் கூட்டத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துவார். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் இன்று மாலை வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* நடிகர் ஸ்ரீகாந்த் மறைவு: முதல்வர் இரங்கல்

நடிகர் ஸ்ரீகாந்த் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: பழம்பெரும் நடிகர் ஸ்ரீகாந்த் உடல்நலக்குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருந்துகிறேன். இயக்குநர் ஸ்ரீதரால் திரையுலகில் அறிமுகமாகி பைரவி, தங்கப்பதக்கம் உள்ளிட்ட மறக்கமுடியாத பல திரைப்படங்களில் ஸ்ரீகாந்த் நடித்துள்ளார். எங்கள் இல்லத்தின் அருகே வசித்தவர் என்பதால் தனிப்பட்ட முறையிலும் அவரை நான் நன்கு அறிவேன். ஸ்ரீகாந்தை இழந்து தவிக்கும் அவர்தம் குடும்பத்தினருக்கும் தமிழ்த் திரையுலகினருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னுடைய அருமை நண்பர் ஸ்ரீகாந்த் மறைவு எனக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. அவருடைய ஆத்மா சாந்தியடையட்டும் என்று கூறியுள்ளார்.

Related Stories: