திருச்சியில் ஒன்றிய அரசை கண்டித்து விவசாயிகள் அரை நிர்வாண உண்ணாவிரத போராட்டம்

திருச்சி: ஒன்றிய அரசை கண்டித்து திருச்சியில் விவசாயிகள் அரை நிர்வாண உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய பாஜக அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னது போல் விவசாயிகளின் நெல், கரும்பு உள்ளிட்ட உற்பத்தி பொருட்களுக்கு இரண்டு மடங்கு விலை வழங்க வேண்டும். உபியில் விவசாயிகளை கார் ஏற்றி கொன்ற ஒன்றிய அமைச்சரின் மகனுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும். 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வேண்டும். வேளாண் விளை பொருட்களுக்கு 2 மடங்கு லாபம் தரவேண்டும் என்பது உள்ளிட்ட ேகாரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் திருச்சியில் 46 நாள் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்தனர்.

அதன்படி, மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள்  திருச்சி - கரூர் பைபாஸ் சாலையில் நேற்று உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். தகவல் அறிந்து வந்த போலீசார் உண்ணாவிரதம் இருக்க அனுமதி இல்லை. அனைவரும் கலைந்து செல்லும்படி கூறினர். ஆனால் விவசாயிகள் போராட்டத்தை கைவிட மறுத்ததால் அய்யாக்கண்ணு உள்பட 100 பேரை கைது செய்து, அண்ணாமலை நகரில் உள்ள அய்யாக்கண்ணு வீட்டில் கொண்டு வந்து விட்டனர். அங்கேயே விவசாயிகள் நேற்று முதல் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அய்யாக்கண்ணு கூறுகையில், தினமும் 15 பேர் என 46 நாட்களுக்கு தொடர் உண்ணாவிரதம் இருப்போம். தினமும் நூதன முறையில் போராட்டம் நடத்துவோம். இதில் முதல்கட்டமாக இன்று (நேற்று) சட்டை அணியாமல் அரை நிர்வாணமாக உண்ணாவிரதம் போராட்டம் துவக்கி உள்ளோம் என்றார்.

Related Stories: