தீவிரவாதத்தை ஒடுக்க உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும்: இந்தியா அழைப்பு

கஜகஸ்தான்: பருவநிலை மாற்றம், கொரோனா தொற்று விவகாரம் போன்று தீவிரவாதத்தை ஒடுக்கவும் சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்று இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. மத்திய ஆசிய நாடுகளுடனான உறவை மேலும் விரிவுபடுத்தும் நோக்கில், கிர்கிஸ்தான், கஜகஸ்தான் மற்றும் ஆர்மீனியா ஆகிய நாடுகளுக்கு ஒன்றிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

முதலாவதாக கிர்கிஸ்தான் சென்ற அவர், நேற்று கஜகஸ்தான் சென்றார். அங்கு நடந்த 6வது வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில் பங்கேற்று அவர் பேசியதாவது:  ‘சர்வதேச கொள்கைகளின் அடிப்படையில் ஒரு நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிக்க வேண்டும். அமைதி, முன்னேற்றம் மட்டுமே நமது குறிக்கோளாக இருந்தால் தீவிரவாதத்தை எளிதில் வென்று விடலாம். தற்போதைய கால கட்டத்தில் தீவிரவாதத்தை மட்டுமே வைத்து கொண்டு ஒருநாட்டை எதிர்கொள்வது என்பது முடியாது.

எல்லை கடந்த தீவிரவாதம் ஒரு ஆட்சியின் சிறந்த கலை நுணுக்கம் அல்ல. அதுவும் தீவிரவாதத்தின் மற்றொரு முகமாகும். கொரோனா தொற்று பரவல், பருவநிலை மாற்றம் போன்ற உலகளாவிய பிரச்னைகளில் நாட்டுக்கு நாடு உதவி செய்து ஒருங்கிணைந்து செயல்பட்டது போன்று தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச நாடுகள் ஒன்றிணைய வேண்டும்’. இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: