கூடலூர் அருகே 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியின் படம் கண்காணிப்பு கேமராவில் பதிவு: மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்று வட்டார பகுதிகளில் 4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியான டி23 புலி கடந்த 9ம் தேதி மசினகுடி பகுதியில் ஆதிவாசியை தாக்கிக்கொன்றது. இதையடுத்து இந்த புலியை தேடும் பணி கடந்த 12 நாட்களாக மசினகுடி, சிங்காரா, பொக்காபுரம், மாயா உள்ளிட்ட பல்வேறு வனப்பகுதிகளில் நடைபெற்று வந்தது. கடந்த 8 நாட்களாக இந்த புலி வனத்துறையின் கண்களுக்கு தென்படாமலும், கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகாமலும் இருந்தது. மசினகுடி வனப்பகுதியில் பதுங்கி இருந்த அந்த புலி மாயார், தெப்பக்காடு, முதுமலை வழியாக ஒம்பெட்டா வன பகுதிக்கு சென்றுள்ளது. ஓம்பெட்டா பகுதியில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் நேற்று முன்தினம் இரவு டி23 புலி பதிவாகி உள்ளது.

இதையடுத்து ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட போஸ்பாரா, மற்றும் முதுமலை ஊராட்சிக்கு உட்பட்ட முதுகுழி, நாகம்பள்ளி, மண்டக்கரை, புலியாளம் உள்ளிட்ட இடங்களில் வனத்துறை சார்பில் பொதுமக்களுக்கு ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மீண்டும் தப்பிய புலி: டி23 புலி நேற்று மாலை  மதுரை ஊராட்சியை அடுத்த கோழிக்கண்டி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் பதுங்கி இருப்பதை வனத்துறையினர் கண்டுபிடித்தனர். புலிக்கு மயக்க ஊசி செலுத்த முயன்றபோது அங்கிருந்து தப்பிய புலி, கோழிக்கண்டியில் இஞ்சி தோட்டம் ஒன்றில் படுத்திருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து வனத்துறைக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து, வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் அங்கு விரைந்து சென்று மயக்க ஊசி செலுத்துவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டபோது அங்கிருந்தும் புலி தப்பி மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இரவு நேரமானதால் புலியை தேடும் பணி நிறுத்தப்பட்டது.

Related Stories: