டெல்லியில் பாக். தீவிரவாதி கைது: உ.பி உள்ளிட்ட இடங்களில் என்ஐஏ சோதனை

புதுடெல்லி: டெல்லியில் பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதியை சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். மேலும், ெடல்லி, உத்தரபிரதேசத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனைகள் நடத்தி வருகின்றனர். தலைநகர் டெல்லியின் லட்சுமி நகரில் பதுங்கியிருந்த பாகிஸ்தானைச் சேர்ந்த தீவிரவாதியை ஆயுதங்களுடன் டெல்லியின் சிறப்புப் பிரிவு போலீசார் நேற்றிரவு அதிரடியாக கைது செய்தனர். அவனிடம் இருந்து ஏ.கே.47 ரக துப்பாக்கி, 2 பிஸ்டல்கள், கையெறி குண்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து சிறப்பு பிரிவு போலீசார் கூறுகையில், ‘தீவிரவாதிகளுடன் தொடர்புடைய காஷ்மீர் இளைஞர்கள் சிலர் டெல்லி, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் பதுங்கி உள்ளனர். அவர்கள், டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அவர்கள் மறைந்திருக்கலாம் என்ற தகவல் என்ஐஏவுக்கு கிடைத்துள்ளது. அதனால், டெல்லி, உத்தரபிரதேசத்தின் சில இடங்களில் என்ஐஏ சோதனை இன்று தொடங்கியுள்ளது. சில இடங்களில் ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் கைப்பற்றி உள்ளோம்.

டெல்லியில் சிக்கிய பாகிஸ்தான் தீவிரவாதியின் பெயர் முகமது அஷ்ரப் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. இந்தியாவின் போலி அடையாள அட்டையை வைத்துக் கொண்டு, டெல்லியில் தங்கியிருந்தான். அந்த அடையாள அட்டையில் அலி முகமது நூர் என்று பெயர் பதியப்பட்டுள்ளது. அவனிடம் இந்திய பாஸ்போர்ட்டும் இருந்தது. அவனிடம் நடத்திய விசாரணையில், பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புடன் இணைந்து சதிவேலைகளில் ஈடுபட முயன்றது தெரியவந்தது’ என்றனர்.

Related Stories: