வாக்கு எண்ணும் மையத்தில் உணவு, தண்ணீர் வழங்காததால் 2 ஆசிரியைகள் திடீர் மயக்கம்: படூரில் போராட்டத்தால் பரபரப்பு

திருப்போரூர்: படூர் தனியார் பல்கலைக்கழகத்தில் வாக்கு  எண்ணும் மையத்தில் உணவு, தண்ணீர் வழங்காததால் 2 ஆசிரியைகள் மயங்கி விழுந்தனர். இதனால் போராட்டம் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்போரூர் ஒன்றியத்தில் படூர் பகுதியில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் வாக்கு  எண்ணும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு  காலை உணவு, தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனால் 2 ஆசிரியைகள் மயக்கமடைந்தனர். இதனால் சக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர்,  வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபட்டு வரும் எங்களுக்கு முறையாக உணவு, தண்ணீர் வழங்கவில்லை என கூறி  வாக்கு எண்ணும் அரங்கத்தைவிட்டு வெளியில் வந்து  போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்காரணமாக காலை முதல்  வாக்கு எண்ணும் பணி முழுவதுமாக நிறுத்தப்பட்டது.  இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாமல்லபுரம் எஸ்பி ஜெகதீஸ்வரன், தேர்தல் அலுவலர்கள் வெங்கட்ராமன், பஞ்சு ஆகியோர்  சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்ட  ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

 அப்போது அவர்கள், முறையாக உணவு, தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கூறினர். ஆனாலும் 10 மணி வரை வாக்கு எண்ணும் பணி தொடங்கப்படவில்லை. இந்த சம்பவத்தால் படூர் தனியார் பல்கலைக்கழகத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

Related Stories: