திருவெண்ணெய்நல்லூர் அருகே 800 மதுபாட்டில்கள், 120 லிட்டர் சாராயம் பறிமுதல்-சாராய வியாபாரி கைது

திருவெண்ணெய்நல்லூர் : விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அருகே உள்ள காந்திகுப்பம் பகுதியில் புதுவை மதுபாட்டில்களை கடத்தி சென்று பதுக்கி வைத்துள்ளதாக திருவெண்ணெய்நல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் பயிற்சி டிஎஸ்பி ஆனந்தராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பாலசிங்கம் மற்றும் போலீசார் காந்திகுப்பம் பகுதிக்கு சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அதில் ஒருவர் வீட்டின் பின்னால் சந்தேகிக்கும்படி சாக்கு மூட்டைகள் அடுக்கி வைத்துள்ளார்.

அங்கு சென்று சோதனை மேற்கொண்டதில் மூட்டையில் பதுக்கி வைத்திருந்த அனைத்தும் புதுவை மதுபாட்டில்கள் மற்றும் சாராயம் என தெரியவந்தது. உடனே வீட்டின் உரிமையாளர் வடிவேல் மகன் கலையரசன்(43) என்பவரை பிடித்து விசாரணை செய்ததில் 800 மதுபாட்டில்கள் மற்றும் 120லிட்டர் சாராயத்தை அவர்தான் கடத்தி வந்து பதுக்கி வைத்திருந்தார் என்பது தெரியவந்தது. சம்பவ இடத்திலேயே 120லிட்டர் சாராயத்தை போலீசார் கீழே ஊற்றி அழித்தனர்.

இதையடுத்து கலையரசனை கைது செய்து அவரிடமிருந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்து காவல்நிலையத்திற்கு எடுத்து சென்று வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் திருவெண்ணெய்நல்லூர் காவல்நிலையத்தில் கலையரசன் மீது சாராயம் மற்றும் மதுபாட்டில் விற்றதாக 3 வழக்குகள் நிலுவையில் உள்ளது. கலையரசன் வீடு திருவெண்ணெய்நல்லூர் வாக்கு மையத்தின் அருகில் உள்ள நிலையில் இன்று காலை நடக்கும் வாக்கு எண்ணிக்கையின்போது மதுபாட்டில்களை விற்பனை செய்ய பதுக்கி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: