ஜம்முவில் தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு ஒரு ராணுவ அதிகாரி 4 வீரர்கள் வீரமரணம்: 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையின்போது ஒரு ராணுவ அதிகாரி, 4 வீரர்கள் வீர மரணமடைந்தனர். ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சுரன்கோட் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக நேற்று காலை ராணுவ அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு வீரர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள் வீரர்கள் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ராணுவ அதிகாரி மற்றும் 4 வீரர்கள் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர்கள் வீரமரணம் அடைந்தனர்.

அந்த பகுதியில் தொடர்ந்து தீவிரவாதிகளுக்கு வீரர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலை தாக்குப்பிடிக்க முடியாமல் தீவிரவாதிகள் தப்பி ஓடினர். இதேபோல் அனந்த்நாக் மற்றும் பந்திப்போரா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக்கொல்லப்பட்டான். தீவிரவாதிகள் தாக்குதலில் வீரர் ஒருவர் காயமடைந்தார். இதேபோல் பந்திப்போரா மாவட்டத்தில் கஞ்ஞாஹாங்கிரில் நடந்த என்கவுன்டரில் லஷ்கர் இ தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டான். அந்த தீவிரவாதி இம்தியாஸ் அகமத் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

Related Stories: