பதிவுத்துறை குறை தீர்க்கும் முகாம் துவக்கம் மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை: வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி உறுதி

மதுரை: மக்களிடமிருந்து பெற்ற மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் தீர்வு காணப்படும் என வணிக வரித்துறை அமைச்சர் பி.மூர்த்தி கூறினார். தமிழகத்தில் முதன்முறையாக மதுரை மாவட்டம், ராஜகம்பீரத்தில் உள்ள பதிவுத்துறை அலுவலகத்தில் குறை தீர்க்கும் முகாமை, வணிக வரி மற்றும் பத்திர பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று துவக்கி வைத்து, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெற்றார். முகாமில் அவர் பேசியதாவது : முதல்வரின் உத்தரவின்படி, 50 மாவட்டங்களில் உள்ள பத்திர பதிவுத்துறையிலும், சார்பதிவாளர் அலுவலகங்களிலும் வாரந்தோறும் திங்கட்கிழமை காலை 10 மணி முதல் 1 மணி வரை பதிவுத்துறையின் குறை தீர்க்கும் முகாம் கூட்டம் இன்று (நேற்று) முதல் நடக்கிறது.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் நடவடிக்கை மேற்கொண்டு தீர்வு காணப்படும். வில்லங்கம் சம்பந்தமான மனுக்களுக்கு அன்றைய தினமே தீர்வு காணப்படும். கோயில் நிலங்களையும், அரசுக்கு சொந்தமான நிலங்களையும் மற்றும் மசூதிக்கு சொந்தமான இடங்களையும் இனி பதிவு செய்ய முடியாது. இவ்வாறு அவர் கூறினார். பின்னர் அமைச்சர் பி.மூர்த்தி அளித்த பேட்டியில், ‘‘ 103 ஜவுளிக்கடையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.108 கோடிக்கு வரிஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கமிஷன் வாங்குவதற்காகவே அரசு அதிகாரிகளை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்தியுள்ளனர்’’ என்றார்.

Related Stories: