கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விஜயதசமி நாளில் கோயில்களை திறக்கக் கோரி வழக்கு: உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை: விஜயதசமி நாளன்று கோயில்களை திறக்க உத்தரவிடக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டுள்ளது. கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த ஆர்.பொன்னுசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், கொரோனா கட்டுப்பாடுகளை தொடர்ந்து அமல்படுத்தும் வகையில் ஒவ்வொரு வாரமும் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்கள் மூடியிருக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், நவராத்திரி பண்டிகையின் முக்கிய நாளாக கொண்டாடப்படும் விஜயதசமி அக்டோபர் 15ம் தேதி வெள்ளிக்கிழமையில் வருகிறது.

கோயில்களில் முக்கிய பூஜைகள் நடத்தப்பட உள்ளதால் அன்றைய தினம் கோயில்களை திறக்க அனுமதிக்க வேண்டும். சென்னை காசிமேடு துறைமுகத்தில் மீன் விற்பனை அங்காடியை அனுமதிக்கும் அரசு, நவராத்திரி நாட்களின் முக்கியத்துவத்தை கருதி துர்க்கையை வழிபடும் பெண் பக்தர்களின் மனதை புரிந்து கொள்ளாமல் கோயிலை திறக்காமல் பிடிவாதமாக உள்ளது. ஏற்கனவே வழிபாட்டு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி தரிசனத்திற்காக கோயில்களை திறக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார். இந்த மனு இன்று நீதிபதிகள் ஆர்.மகாதேவன், அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வரவுள்ளது.

Related Stories: