மும்பை தொழிலதிபரிடம் பல கோடி மோசடி செய்துவிட்டு தலைமறைவான வங்க தேசத்தை சேர்ந்த வாலிபர் சென்னையில் கைது

மீனம்பாக்கம்: மும்பை தொழிலதிபரிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு ஓராண்டாக  தலைமறைவான வங்கதேசத்தை சேர்ந்தவர், ஜெட்டாவில் இருந்து வந்தபோது சென்னையில் சிக்கினார். அவரை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் கைது செய்தனர். சவுதி அரேபியன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்றிரவு ஜெட்டாவில் இருந்து  சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.

அப்போது வங்கதேசத்தை சேர்ந்த முகமது முஸ்கின் (28) என்பவர் தொழில் விசாவில் வந்திருந்தார். அவரது ஆவணங்களை குடியுரிமை அதிகாரிகள் பரிசோதித்தபோது, மும்பை போலீசால் கடந்த ஓராண்டாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை ஒரு அறையில் அடைத்து வைத்து தீவிர விசாரணை நடத்தினர். இதில், மும்பையை சேர்ந்த  ஒரு இந்திய தொழிலதிபரிடம் தொழில் ரீதியாக கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்து விட்டு முகமது முஸ்கின் தலைமறைவாகி விட்டார்.

இதையடுத்து மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து முகமது முஸ்கினை தேடினர். அவர் வெளிநாட்டிற்கு தப்பி சென்று தெரிந்தது. அவரை தலைமறைவு குற்றவாளியாக மும்பை போலீசார் அறிவித்தனர். மேலும் அனைத்து சர்வதேச விமான நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது தொழில் விவகாரமாக இந்தியா வந்தபோது சென்னையில் சிக்கினார். உடனடியாக விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள், மும்பை போலீசுக்கு தெரிவித்தனர். இதையடுத்து மும்பை போலீஸ் தனிப்படையினர் சென்னைக்கு விரைந்துள்ளனர்.

Related Stories: