சித்தூர் பெனுமூர் நெடுஞ்சாலையில் குண்டும், குழியுமான சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதி-சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

சித்தூர் :  சித்தூர் பெனுமூர் நெடுஞ்சாலையில் குண்டும் குழியுமாக சாலைகள் இருப்பதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், பெனுமூர் மண்டலத்திலிருந்து நாள்தோறும் ஏராளமான பொதுமக்கள் சித்தூர்  மாநகரத்திற்கு சென்று வருகின்றனர். அதேபோல் நாள்தோறும் எங்கள் பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் பயிரிடப்படும் விவசாய தானியங்கள் மற்றும் காய்கறிகளை சித்தூர் மார்க்கெட்டிற்கு அதிகாலை எடுத்துச் செல்கின்றனர்.

ஆனால் இங்குள்ள சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் விவசாயிகள் தங்கள் விவசாய நிலத்தில் பயிரிடப்படும் காய்கறிகளை மார்க்கெட்டிற்கு எடுத்து செல்ல பெரும் சிரமத்துடன் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

 இருசக்கர வாகனத்தில் காய்கறிகளை ஏற்றிச் செல்லும் விவசாயிகள் விபத்தில் சிக்கி படுகாயமடைகின்றனர்.இதுகுறித்து பலமுறை மண்டல வருவாய் துறை அலுவலகத்திலும், மாவட்ட வருவாய்த் துறை அலுவலகத்திலும் மற்றும் மாநில நெடுஞ்சாலை துறை அலுவலகத்திலும் பல முறை புகார் தெரிவித்தும்  அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதேபோல் எங்கள் பகுதியில் இருந்து நாள்தோறும் 1000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் சித்தூர் மாநகருக்குச் சென்று கல்லூரிகளிலும், பள்ளிகளிலும் படித்து வருகின்றனர்.

மாணவ மாணவிகள் இரு சக்கர வாகனங்களிலும் சைக்கிள்களிலும் பள்ளிக்கு செல்கின்றனர்.

ஆனால் இங்குள்ள சாலை குண்டும் குழியுமாக இருப்பதால் விபத்துக்கள் ஏற்பட்டு மாணவ-மாணவிகள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே உடனடியாக சித்தூர்- பெனுமூர் நெடுஞ்சாலையை சீரமைத்து குண்டும் குழியுமாக இருக்கும் சாலையை புதியதாக அமைக்க வேண்டும்.

இதனால் வாகன ஓட்டிகளும் பள்ளி மாணவ மாணவிகளும், விவசாயிகளும் பயன்பெறுவார்கள் விபத்துக்கள் ஏற்படாமல் இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இனியாவது அதிகாரிகள் சாலையை சீரமைப்பார்களா  என அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: